அக்குறணை பிரதேச சபைக்கு உட்பட்ட உக்கல பிரதேச மக்களுக்கு சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் பொஸ்வானாவில் உள்ள இலங்கையைச் சேர்ந்தவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட சுத்தமான ஆழ்குழாய் கிணற்றுக்கான நீர் விநியோகத் திட்டம் பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கும் வைபவம் அக்குறணை உக்கல சமுர்த்தி அபிவிருத்தி அலுவலகத்தில் அக்குறணை பிரதேச சபை உறுப்பினர் சாபானி தலைமையில் இடம்பெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நீர் விநியோகத் திட்டத்தை மக்களின் பாவனைக்காக அதனைத் திறந்து வைத்து உரையாற்றும் போது தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
கண்டி வடக்கு பாரிய நீர் விநியோகத் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் அக்குறணை பிரதேச மக்களும் பயன்பெறவுள்ளனர். எனினும் அக்குறணை பிரதேச செயலத்திற்கு உட்பட்ட உக்கலைப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்குத் தேவையான கண்டி வடக்கு நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் நீரைப் பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகைகள் மிக குறைவாக காணப்படுகின்றது. அதேவேளையில் அக்குறணைப் பிரதேசத்தில் சுத்தமான குடி நீரைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் பின்தங்கிய கிராமமாக உக்கல் கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளில் உள்ள மக்களே உள்ளனர். அக்குறணைப் பிரதேச சபை எல்லைக்குள் நூற்றுக்கு தொன்னூறு விகிதமான அளவில் தண்ணீர் விநியோகத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் உக்கல , மல்வானஹின்ன மற்றும் டவர் மஹல்லா ஆகிய பிரதேசங்களில் குறித்த தண்ணீர் வேலைத் திட்டத்தை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. பொஸ்வானவில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடிய இலங்கையைச் சேர்ந்த சகோதரர்கள் வருடா வருடம் இப்படியான ஆழ்குழாய்க் கிணறுகளை நிர்மாணித்துக் கொடுத்து சுத்தமான குடி நீர்வசதிகளை வழங்கி வருகின்றனர். இது நமது பிரதேசத்திற்கு கிடைத்த பெரும் வரப்பிரகாசமாகும்.
சகோதரர் பதுருஸ்ஸமான் தான் அக்குறணைப் பிரதேசத்திற்கான இணைப்பாளராக இருக்கின்றார். உக்கலப் பிரதேச மக்களுடைய தண்ணீர்ப் பிரச்சினையை அறிந்து அவர்களிடம் முன் வைத்த கோரிக்கைக்கு இணங்க ஒரு பெருந்தொகையிலான நிதி ஒதுக்கீடு செய்து தந்தார்கள். ஆனாலும் இதனை நிறைவு செய்வதற்கு இன்னுமொரு தொகை நிதி தேவைப்பாடாக இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய சொந்த நிதியிலும் ஒரு நிதியினை ஒதுக்கீடு செய்து இவ்வேலைத் திட்டத்தை நிறைவு செய்யக் கூடியதாக இருந்தது. இதை வைத்து நாங்கள் வேறு எவற்றையும் எதிர்பார்க்க வில்லை. இதை ஒழுங்கான முறையில் பராமரித்து சீராக தொடர்ந்து செய்து கொள்ள வேண்டும்.
இந்த நிதி உதவியைச் செய்த அக்குறணையைச் சேர்ந்த சகோதரர் வாகன விபத்தில் அகால மரணம் அடைந்து விட்டார். இப்பிரதேசத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கங்கா முஹ்சீன் ஹாஜியார் அவர்களுடைய மகன்தான் மனார் ஆவார். எனவே மரணத்திற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
ஒரு மணித்தியாலத்திற்கு 2000 க்கும் மேற்பட் லீட்டர் தண்;ணீர் பெற்றுக் கொள்வதற்கான இப்பிரதேச மக்களுக்கு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது.
இந்நிகழ்வில் கிராம உத்தியோகஸ்தர், சகோதரர் பதுருஸ்ஸமான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்