தொற்றா நோயை குறைப்பதற்கான மாவட்ட மட்ட செயற்குழு அங்குரார்ப்பணம்!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) தொற்றா நோயை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மாவட்ட மட்ட குழு  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் அவர்களது தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது  குறித்த தொற்றா நோயை குறைப்பதற்கான மாவட்ட செயற்குழு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் தொற்றா நோய் தொடர்பான மாவட்ட மட்டக் குழுக்கள் மாவட்ட ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான
தொற்றா நோயை குறைப்பதற்காக சேவையாற்றுவதற்கான மாவட்ட மட்ட செயற் குழுவானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும்  மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் ஆகிய இருவரது இணைத்தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் தொற்றா நோயாளர்களை குறைப்பதற்காகவும், தொற்றா நோய் ஊடாக அதிகரித்துவரும் மரண வீதத்தினை குறைக்கும் பொருட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த மாவட்ட மட்ட செயற்குழுவின் ஊடாக பிரதேச மட்டத்தில் செயற்பாடுகளை ஆரம்பித்தல் தொடர்பாகவும், பிரதேச மட்ட குழுக்களை துறைசார் நிபுணர்களையும் உள்வாங்கி அமைத்து செயற்திறனுடன் செயற்படுத்தல் தொடர்பாகவும் பொதுமக்களை எவ்வாறு விழிப்புணர்வூட்டுவது என்பது தொடர்பாகவும் இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

மூன்று வருடங்கள் செயலாற்றவுள்ள குறித்த மாவட்ட மட்ட செயற்குழுவானது
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.புண்ணியமூர்த்தி சசிகலா அவர்களை செயலாளராகவும் இணைச்செயலாளராக பிராந்திய  சுகாதார பணிமனையின் தொற்றா நோய் வைத்தியநிபுணர் சிவநாதன் அவர்களையும் கொண்டு செயற்படவுள்ளதுடன், மாவட்ட மட்ட செயற்குழுவில் மாவட்ட மட்டத்தில் சேவையாற்றும் துறைசார் அதிகாரிகள் 16 பேரை உறுப்பினர்களாக கொண்டு செயற்படவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், சுகாதார துறை சார்ந்த அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரிகள், வலயக்கல்வி பணிமனைகளின் அதிகாரிகள், கமநல சேவை அதிகாரிகள், மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள், சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் மற்றும் மாவட்ட விளையாட்டு துறைசார் அதிகாரிகள் உட்பட மேலும் பல துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும்  கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆந் திகதிக்கு முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தொற்றா நோயை குறைப்பதற்கான பிரதேச  மட்ட செயற்குழு ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.