கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோருக்காக 2024ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

(வாஸ் கூஞ்ஞ)  கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ‘உங்களுக்கு ஒரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்  திங்கள் கிழமை (06.12.2021) முற்பகல் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செலவின தலைப்பு விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் 4 இராஜாங்க அமைச்சுக்கள் செயற்படுகின்றன.

நாம் இதுவரை 21 நகர அபிவிருத்தி திட்டங்களை நிறைவுசெய்துள்ளோம். மேலும் 52 நகர திட்டங்கள் நிறைவடையும் தருணத்தில் உள்ளன. அத்துடன் 2024ஆம் ஆண்டளவில் மேலும் 136 நகர அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம்.

பின்தங்கிய நகரங்களின் மேம்பாடு மற்றும் அழகுபடுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ‘நூறு நகரங்கள்’ திட்டத்தின் கீழ் 117 நகரங்கள் அழகுபடுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டுக்குள் மேலும் 100 நகரங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக 12 வாகன நிறுத்தங்களை நிர்மாணிக்கும் திட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய ஒவ்வொரு குடும்பத்திற்கும் சகல வசதிகளுடன் கூடிய வீடொன்றை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதன் கீழ் நகர, கிராம ,தோட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கும் வீடுகள் நிர்மாணிக்கப்படும்.

நகர்ப்புற குறைந்த வசதிகளை கொண்ட மக்களுக்காக 2024ஆம் ஆண்டளவில் 50,000 வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்ய எதிர்பார்க்கிறோம். அதற்கமைய தற்போது 14,083 வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து மக்களுக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய 2024ஆம் ஆண்டளவில் கொழும்பு பிரதேசத்தில் காணப்படும் குறைந்த வசதிகளை கொண்ட மக்கள் குடியிருப்புகளை நவீன தொடர்மாடிக் குடியிருப்புகளாக மாற்றுவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும்.

நடுத்தர வர்க்கத்தினருக்காக 1108 வீடுகளை 2021ஆம் ஆண்டில் பயனாளர்களுக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நடுத்தர வர்க்கத்தினருக்கான 13 வீட்டுத் திட்டங்களின் ஊடாக 6128 வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக செயற்படுத்தப்படும் இந்த வீட்டுத்திட்டங்களுக்கு அமையஇ நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையினாலும் 3 வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையை குறிப்பிட வேண்டும். இதனூடான 928 வீடுகள் நிர்மாணிக்கப்படும்.

அத்துடன் இந்த தொடர்மாடிக் குடியிருப்புகளின் கட்டுமானத்திற்கு இணையாக, அவற்றை முறையாகவும் திறம்படவும் ஒழுங்குபடுத்துவது முக்கியம். அதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

கிராமப்புற குறைந்த வருமானம் பெறுவோரின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ‘உங்களுக்கு ஒரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்’ வீட்டுத் திட்டத்தின் கீழ்இ நாட்டின் 14022 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி ஆண்டுதோறும் ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டுக்குள் நிர்மாணிக்கப்படவுள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 71110 ஆகும்.

அத்துடன்இ ‘சியபத் தொடர்மாடி குடியிருப்பு’ திட்டத்தின் கீழ் 6000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தோட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதற்காக இந்திய நிதி உதவியின் கீழ் 4000 வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்ய முடிந்துள்ளது.

2022ஆம் ஆண்டு முதல் தோட்ட மக்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய நிதி உதவி திட்டமும் ஆரம்பிக்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் பிக்குமார்களின் பெற்றோருக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘மிஹிந்து நிவஹன’ திட்டத்தின் கீழ் 2000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டமும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சிக்காக கடற்கரைப் பாதுகாப்பு மற்றும் கடற்கரை பூங்காக்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், நாட்டை சூழவுள்ள சமுத்திர சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது தொடர்பிலும் நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றோம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மேல் மாகாணத்தில் வெள்ளநீரை கட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்திட்டம் நிறைவுசெய்யப்படும் பட்சத்தின் மேல் மாகாணத்தில் வெள்ள அபாயம் பெருமளவு குறைவடையும் என எதிர்பார்க்கின்றோம்.

உலகளாவிய கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் முழு உலகமும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்ட போதிலும், நகர அபிவிருத்தி, வீடமைப்பு உள்ளிட்ட எமது அமைச்சின் விடயப்பரப்பிற்கு உரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்தது என்று நம்புகின்றோம் என கௌரவ பிரதமர் தெரிவித்தார்.