பாடசாலை மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க நூல்கள் அன்பளிப்பு

(பொலிவேரியன் நிருபர் – எம்.எஸ்.எம்.ஸாகிர்) நிந்தவூர் கமு/கமு/அல் -அஷ்றக் ம.ம.வி (தே.பா) பாடசாலையின் நூலகத்தை விரிவுபடுத்தவும், மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் பழைய மாணவர் சங்கம் முன்னெடுத்த “நூல் சேகரிப்பு” திட்டத்திற்காக முதற்கட்டமாகக் கிடைக்கப்பெற்ற நூல்களின் ஒரு தொகுதியை (180 புத்தகங்கள்) பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (06) திங்கட்கிழமை காலை ஆராதனைக் கூட்டத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பாடசாலையின் பழைய மாணவரும், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளருமான எச். அப்துல் சத்தார் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
அல் – காசிமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாடசாலை அதிபர், பிரதி அதிபர், உயர்தர வகுப்புக்கான பகுதித்தலைவர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலைக்கு அடுத்த கட்ட நூல்கள் விரைவில் கையளிக்கப்படவுள்ள அதேவேளை, இதுவரை நூல்களை அன்பளிப்புச் செய்த நல்லுள்ளங்கள் மற்றும் முன்னெடுப்புக்களை மேற்கொண்ட பழைய மாணவர் சங்கத்தினர், விசேடமாக செயலாளரும் விரிவுரையாளருமான சிப்லி ஆகியோருக்கு பாடசாலையின் அதிபர் ஏ.அப்துல் கபூர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.