காத்தான்குடியில் போலி சி.ஜ.டி கைது-சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான்

திருட்டு விசாரணை ஒன்றினை சமாளிப்பதற்கு கப்பம் கோரிய போலி சி.ஐ.டி ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கல்லடி உப்போடை புறநகர் பகுதி ஒன்றில் அண்மையில் நகை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.இதன் பிரகாரம் குறித்த திருட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அடையாளம் கண்ட காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொள்வதற்காக குறித்த சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளனர்.

பின்னர் சந்தேக நபர் வீட்டில் இல்லாமையினால் மீண்டும் வருவதாக கூறி அவ்விடத்தில் இருந்து சென்றுள்ள நிலையில் அதே வீட்டிற்கு சில நிமிடத்திற்கு மற்றுமொரு   போலி சி.ஐ.டி என கூறப்படும் நபர் ஒருவர் சென்றுள்ளதுடன்  ரூபா 10 ஆயிரம் கப்பமாக  தந்தால் குறித்த பிரச்சினையை தீர்த்து தருவதாக சந்தேக நபரின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

கப்பம் கோரிய போலி சி.ஐ.டி தொடர்பாக தொடர்பில் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய ஞாயிற்றுக்கிழமை(06) இரவு  காத்தான்குடி  பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா  தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் வைத்திருந்த அடையாள அட்டையில் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கல்விப்பணிப்பாளர் என பதவி  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி  பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.