பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் தோல் நோய்க் கிளினிக்: வைத்திய அத்தியட்சகர் றிபாஸ் தெரிவிப்பு

(ஏ.எல்.றியாஸ்)பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் பிரதி மாதம் தோறும் தோல் நோய்க் கிளினிக்கினை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த கிளினிக்கில் கலந்துகொண்டு சிகிச்சை பெற விரும்புவோர் வைத்தியசாலைக்கு சமூகமளித்து தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் (6) மேலும் தெரிவிக்கையில்,

பொத்துவில் மற்றும் அதனை அன்டிய பிரதேச மக்களின் நலன்கருதி பொத்துவில் ஆதார வைத்தியசாலையில், தோல் நோய்க் கிளினிக்கினை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்தக் கிளினிக்கினை பிரதி மாதம் தோறும் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குறித்த கிளினிக் சேவையினை வைத்தியசாலையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளோம். இந்நிகழ்வில் தோல் நோய் வைத்திய நிபுணர் டொக்டர் ஐ.எல்.மாஹில் கலந்துகொண்டார். இந்தக் கிளினிக்கில் கலந்துகொண்டு சிகிச்சை பெற விரும்பும் நோயாளர்கள் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு சமூகமளித்து தங்களது பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும்.

பொத்துவில் மற்றும் அதனை அன்டிய பிரதேச மக்கள் தங்களது தோல் சம்மந்தமான நோய்களுக்கு தூரப் பிரதேச வைத்தியசாலைகளுக்கு சென்றே சிகிச்சைகளைப் பெற்று வந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கினர். இவ்வாறான சந்தப்பத்தில் இப்பிராந்திய மக்களின் நலன் கருதி, பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் தோல் நோய்க் கிளினிக் சேவையினை ஆரம்பித்துள்ளோம்.

பொத்துவில், பானம, லகுகல, ஊரணி மற்றும் கோமாரி போன்ற பிரதேச மக்கள் இக்கிளினிக் சேவையினூடாக நன்மையடையவுள்ளனர் எனவும் வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.