இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
பாகிஸ்தானில் தொழில் நிறுவனமொன்றில் நீண்ட காலமாக முகாமையாளராக கடமையாற்றி வந்த நிலையில், எமது நாட்டுப் பிரஜை ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு, எரித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் முஸ்லிம் நாடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதானது இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய எமக்கு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மிலேச்சத்தனமான சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிகின்றோம். தமது நாட்டில் பணியாற்றுகின்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டியது குறித்த நாட்டு அரசாங்கத்தின் பொறுப்பாகும். அந்த வகையில் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ள சம்பவத்திற்கு அந்நாட்டுப் பிரதமர் எமது நாட்டு ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு, வருத்தம் தெரிவித்திருப்பதுடன் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் எனவும் உறுதியளித்திருக்கின்றார். சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என ஊடககங்கள் வாயிலாக அறிய முடிகிறது. பாகிஸ்தான் பிரதமரின் இந்த முன்மாதிரியான செயற்பாடு எமது நாட்டு மக்களுக்கு ஆறுதலான விடயம் என்பதில் சந்தேகமில்லை. இலங்கையுடன் நீண்ட காலமாக நட்புறவை பேணி வருகின்ற பாகிஸ்தானில் இத்தகைய சம்பவம் ஒன்று நடத்தப்பட்டிருப்பதானது அந்நாட்டின் இறைமைக்கும் புகழுக்கும் மாசு கற்பிக்கும் நடவடிக்கையாக அமைந்திருக்கிறது. ஆகையினால் இதன் பின்புலம் என்ன என்பது குறித்து ஆராயப்பட்டு, உண்மை நிலைவரம் வெளிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் படுகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு உடனடியாக உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் இதன் மூலம் பாகிஸ்தான் தனது பொறுப்புடைமையையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம். |