மன்னாரில் கொவிட் மற்றும் டெங்கு அபாயம் காணப்படுவதால் நோயாளிகள் சுயசிகிச்சையை கைவிட்டு வைத்தியரை நாடவும்

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன்

(வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்தில் கொவிட் தொற்று ஆட்கொண்டவர்களின் மரணமும் மற்றும் டெங்கு தொற்றாளர்களும் இனம் காணப்பட்டு வருவதனால் மக்கள் தங்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் அத்துடன் காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் சுய சிகிச்சையில் ஈடுபடாது அத்துடன் Nளுயுஐனு என்ற மாத்திரையை பாவிக்காது வைத்தியர்களை அனுக வேண்டும் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் புதன்கிழமை (01.12.2021) காலை தனது பணிமனையில் மன்னார் மாவட்டத்தில் நிலவும் கொரோனா மற்றும் டெங்கு தொடர்பாக ஊடக சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் அதாவது செவ்வாய் கிழமை (30.11.2021) 15 நபர்கள் கொவிட் தொற்றோடு புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை நவம்பர் மாதத்தில் 25 நபர்களும் டெங்கு தொற்றோடு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் தொற்றோடு அடையாளம் காணப்பட்ட மொத்த எண்ணிக்கை இந்த வருடம் (2021) 2916 ஆகவும் இதுவரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 2936 ஆகவும் காணப்படுகின்றது.

இத்துடன் கடந்த மாதம் அதாவது நவம்பர் மாதம் ஐந்து நபர்கள் கொவிட் தொற்றால் மரணத்தை தழுவிக் கொண்டனர்.

இதனால் இதுவரை மன்னார் மாவட்டத்தில் 28 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் (நவம்பர்) கொவிட் தொற்றால் உயிர் இழந்த ஐந்து நபர்களில் இருவர் எந்தவிதமான தடுப்பூசிகளும் போடவில்லை.

மற்றைய இருவர் இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் காணப்பட்டிருந்தனர்.

இதேவேளை அறுபது வயதுகளுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகள் போடப்பட்ட பின் மூன்று மாதங்கள் கழிந்திருந்தால் தற்பொழுது இவர்களுக்கு பூஸ்ரர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இந்த வாரம் முதல் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது எதிர்வரும் மாதம் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் தாங்கள் இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டு மூன்று மாதங்கள் கடந்திருந்தால் தங்கள் சுகாதார சேவை அதிகாரி பிரிவுக்குச் சென்று இந்த பூஸ்ரர் தடப்பூசியை பெற்றுக் கொள்ளலாம்.

இதேவேளை மன்னார் மாட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் நவம்பர் மாத்தில் அதிகமாக காணப்பட்டது.

இதுவரை 2021 ஆம் ஆண்டு மொத்தமாக 54 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தார்கள்.

இவர்களில் 25 பேர் கடந்த நவம்பர் மாதம் அடையாளம் காணப்பட்ட நபர்களாக இருக்கின்றனர்.

இதில் பனங்கட்டுகொட்டு, எமில்நகர். சின்னக்கடை, மன்னார் நகர் மூர் வீதி மற்றும் பேசாலை 8 ஆம் வட்டாரம் ஆகிய பகுதிகளில் டெங்கு அபாயம் நிறைந்த இடங்களாக காணப்படுகின்றன.

ஆகவே பொது மக்கள் நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதோடு நுளம்பு தீண்டுவதிலிருந்து இறுக்கமாக தங்களை பாதுகாத்துக் கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.

மேலும் காய்ச்சல் ஏற்படும்பட்சத்தில் தாங்கள் சுயசிகிச்சை பெற்றுக்கொள்ளாது உடனடியாக வைத்தியசாலைகளுக்கோ அல்லது வைத்தியர்களிடமோ தங்களின் நோயை பரிட்சித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

டெங்கு குருதிபெருக்க நோய் அறிகுறியுள்ள இருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் இதை தனிப்பதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் NSAID  என்ற மாத்திரைகளை பாவிக்க வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளுகின்றோம்.

ஆகவே இவ்வாறான சந்தர்பத்தில் அவசியம் வைத்தியரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும்படி மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

இத்துடன் சர்வதேச மட்டத்தில் கரிசனை கொண்டுள்ள ‘கொமைக்ரோன்’ என்ற வைரசும் இலங்கையிலும் பரவியுள்ளதா என்று பரிசோதனைகள் மற்றும் ஆய்வு பரிசோதனைகள் தொடராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் ஒர் அங்கமாக வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தின் உள்ளிட்ட பகுதிகளிலும் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஜெயவர்தத்னபுர பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்காக உட்படுத்தப்பட இருக்கின்றது.

மேலும் இவ் மாதம் (டிசம்பர்) பண்டிகைகள் இடம்பெற இருப்பதால் பொது மக்கள் அதிகமாக ஒன்றும் கூடும் நிலை காணப்படுகின்றது.

இவ்வாறாக ஒன்றுகூடும் நிலையிலிருந்து பொது மக்கள் தவிர்த்துக் கொள்வதோடு சுகாதார வழிமுறைகளை ஒவ்வொருவரும் இறுக்கமாக கடைப்பிடித்து இவ் கொவிட் தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வது உங்கள் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் இவ்வாறு தெரிவித்தார்.