கொவிட் தடுப்பூசிகளை பாதுகாப்பதற்காக குளிர்சாதனப் பெட்டிகள்; கல்முனை பிராந்திய சுகாதார காரியாலயங்கள், வைத்தியசாலைகளுக்கு கையளிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிராந்தியத்தில் கொவிட்-19 ஒழிப்புத் திட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கி நிதியுதவியின் கீழ் கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை பாதுகாப்பதற்காக ஒரு தொகுதி குளிர்சாதனப் பெட்டிகள் சுகாதார அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை இப்பிராந்தியத்திலுள்ள 13 பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை நிர்வாகத்தின் கீழுள்ள 04 ஆதார வைத்தியசாலைகளுக்கும் கையளிக்கும் நிகழ்வு  புதன்கிழமை (01) பணிமனை மண்டபத்தில் கூடத்தில் நடைபெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.எம்.வாஜித், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சி.எம்.மாஹிர் உட்பட பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் குறித்த வைத்தியசாலைகளின் அத்தியட்சகர்களும் உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், உலக வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை பேணிப் பாதுகாப்பதற்காக எமது பிராந்தியத்திற்கும் குளிர்சாதனப் பெட்டிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட சுகாதார அமைச்சுக்கு பிராந்திய சுகாதாரத்துறையின் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக டொக்டர் ஜீ.சுகுணன் இதன்போது குறிப்பிட்டார்.