மட்டக்களப்பு பெருவெளிக்கண்டத்தில் இடைப்போகக் கன்னி முயற்சி வெற்றி

(சுமன்)
ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெருவெளிக்கண்டத்தில் வரலாற்றில் முதற் தடவையாக மேற்கொள்ளப்பட்ட 170 ஏக்கர் இடைப்போகச் செய்கை அக்கண்ட விவசாயிகளுக்கு அமோக விளைச்சலைத் தந்துள்ளதாகப் பெருவெளிக் கண்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பெருவெளிக் கண்டத்தின் தலைவர் க.சித்திரவேல், செயலாளர் ச.சந்திரமோகன் ஆகியோர் தெரிவிக்கையில்,
மேற்படி பெருவெளிக்கண்டத்தில் வரலாற்றில் முதற் தடைவையாக சுமார் 170 ஏக்கர் இடைப்போகச் செய்கைக்கு நீர்ப்பாசனப் பொறியியலாளர் விஸ்ணுரூபன் அவர்களிடம் விவசாயிகள் சார்பில் அனுமதி கோரியிருந்தோம். விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைவாக எமக்கான அனுமதியினைத் தந்து எம்மால் மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கைகளின் நிலைமைகள் தொடர்பில் தனது விசேட கண்காணிப்பு மற்றும் ஆலோசனைகளைப் பெறியிலாளர் வழங்கியிருந்தார். அவரின் அவ்வாறான ஒத்துழைப்புகளின் மூலம் இன்று சராசரியாக ஏக்கர் ஒன்றிற்கு 25 மூடை நெல்லினை விளைவிக்கக் கூடியதாக இருந்தது.
இது வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த செயற்பாடாகும். எமது கன்னி முயற்சிக்கு இத்தகைய பலன் கிடைத்துள்ளது. இதற்குக் காரணமான இருந்த எங்கள் மதிப்பிற்குரிய பொறியியலாளர் விஷ்ணுரூபன் அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அவருடன் இணைந்தவாறு எமக்கு மேலும் ஒத்துழைப்புகளை வழங்கிய மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி நாகரெத்தினம், திட்டமுகாமையாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்தனர்.