பாரதி நினைவு நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு

(படுவான் பாலகன்) கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையின் ஏற்பாட்டில் பாரதி நினைவு நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு கடந்த 22.11.2021 ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைக் கூடத்தில் நடைபெற்றது.

மொழித்துறையின் தலைவர் கலாநிதி சி. சந்திரசேகரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் F.C.றாகல், கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி ஜீ.கென்னடி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மூன்று அமர்வுகளாக நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கு நிகழ்விலே 15 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் நேரடியாகவும் இணையவழியாகவும் இக்கருத்தரங்கில் ஆய்வுரைகளை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதன்போது, பாரதியின் தேசியப் பாடல்கள் (பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன்) பாரதியின் பத்திரிகைத் தலையங்கங்கள் (பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா), பாரதியின் எழுத்து மொழிபெயர்பு  (திரு. ஈஸ்வரநாதப்பிள்ளை குமரன்), பாரதியும் மரபும் (பேராசிரியர் சின்னையா மௌனகுரு), பாரதியார் கட்டுரைகள்  (கலாநிதி சி. சந்திரசேகரம்), பாரதியின் ஸ்வசரிதை (பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு), பாரதியும் வால்ட் விற்மனும்  (வாழ்நாட் பேராசிரியர் அ. சண்முகதாஸ்), பாரதியும் பாரதிதாசனும் (திருமதி றூபி வலன்ரீனா பிரான்சிஸ்)      , ஈழத்துக் கவிஞர்களும் பாரதியும் (பேராசிரியர் செல்லையா யோகராசா, பாரதியின் கவித்திறன்  (பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா), பாரதியின் பக்திப்பாடல்களும் தத்துவப் பாடல்களும்  (கலாநிதி சயனொளிபவன் முகுந்தன்)       , பெண்ணியல் நோக்கில் பாரதியின் எழுத்துக்கள் (கலாநிதி நதிரா மரியசந்தனம்), பாரதியின் கருத்துப் படங்கள் (பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ்), பாரதியின் தொழிலாளர் பற்றிய பாடல்கள் திருமதி விஜிதா திவாகரன்), பாரதியின் வசன கவிதைகள் (திரு. கோபாலப்பிள்ளை குகன்), பாரதியின் நெடுங்கவிதைகள் -குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் (கலாநிதி கனகசபை இரகுபரன்) ஆகிய கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இவ்வாய்வுகள் தொகுக்கப்பட்டு நூல்வடிவில் வெளிவர உள்ளமை குறிப்பிடத்தக்கது.