ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் காரணமாகவே பெண்கள் ஊடகத்துறையிலிருந்து பின்வாங்குகின்றார்கள்

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் – த.கௌரி

(சுமன்)

ஊடகத்துறையில் பல பெண்கள் ஆர்வமாக இருந்தும் இவ்வாறாக ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு வருவதையிட்டு இத்துறைக்கு வருவது குறித்து அவர்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் த.கௌரி தெரிவித்தார்.

வடகிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் இன்றையதினம் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டதாகப் பல ஊடகங்களிலும் நாங்கள் காணக்கூடியதாக இருந்தது. ஊடகவியலாளர் என்பவர் ஒரு நாட்டின், பிரதேசத்தின், சமூகத்தின பிரச்சனைகளை வெளியில் கொண்டு வரும் காவலனாகவும், வெளிச்சமாகவும் இருக்கின்றார்.

நேற்றைய தினம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நாங்கள் எங்கள் பலத்த கண்டனத்தைத் தொவித்துக் கொள்கின்றோம். தாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கிடைக்கப்பெற வேண்டும். தாக்குதலை மேற்கொண்ட இராணுவ அதிகாரிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். கம்பியால் அடிக்கும் அளவிற்கு அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்தது யார்?

ஊடகத்துறையில் பல பெண்கள் ஆர்வமாக இருந்தும் இவ்வாறாக ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு வருவதையிட்டு இத்துறைக்கு வருவது குறித்து அவர்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே பெண்கள் என்ற ரீதியிலும், மாநகரசபை உறுப்பினர் என்ற ரீதியிலும் எங்களை வெளிக்கொணர்ந்தவர்கள் இவ்வாறான ஊடகவியலாளர்களே.

தங்கள் நேரகாலத்தைப் பாராமல் நாட்டுக்காவும், தங்கள் பிரதேசத்திற்காகவும் நன்மை தீமைகளை வெளியில் கொண்டுவரும் காவலர்களாகிய ஊடகவியலாளர்களைத் தாக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. எனவே இத்தாக்குதலுக்கான காரணம் அறியப்பட்டு உரிய இராணுவ அதிகாரிக்கு உரிய நடவடிக்கையினை மேல் அதிகாரிகளினால் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.