சகல வளங்களையும் கொண்ட நாம் உள்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் : அதாஉல்லா எம்.பி பாராளுமன்றில் வலியுறுத்தினார்.

நூருல் ஹுதா உமர்

நம்மிடம் நல்ல நீர், நிலம், விவசாயிகள் இருக்கிறார்கள் ஆனாலும் சேதனப்பசளையை பற்றி பேசிக் கொண்டிருக்கும் நாங்கள் இயற்கையான பால் உற்பத்தியை  இல்லாமலாக்கி விட்டும். பால் தேவைக்காக பல மில்லியன் ரூபாய்களை செலவு செய்து பால்மாக்களை இறக்குமதி செய்கிறோம். இந்த பால்மாக்கள் ஆரோக்கியமானதா? போசாக்குள்ளதா? பாவிப்பதன் மூலம் ஏதாவது பிரச்சினைகள் வருமா? என்பது கூட தெரியாது. விவசாய அமைச்சருடன் ஏனையவர்களும் இணைந்து பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என தேசிய காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (26) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவசாய அமைச்சு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் இந்த நாட்டின் விவசாயிகளுக்கு விவசாய புரட்சியை ஏற்படுத்தி நிறைய பலம் கொடுத்திருந்தார். பயங்கரவாத சூழ்நிலையால் விவசாயம் செய்ய முடியாமல் காடுகளாக இருந்த எத்தனையோ வயல் நிலங்களை பயன்படுத்த வைத்து விவசாயிகளை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வளப்படுத்தினார்.  நஞ்சற்ற, போசாக்குள்ள உணவுங்களை உற்பத்தி செய்து நமது மக்கள் சாப்பிடவும், அதனை பாதுகாக்கும் தேவைப்பாடு இருக்கிறது. நீண்டகாலமாக இரசாயன எண்ணெய்கள், பசளைகளை பாவிப்பதில் உள்ள பிரச்சினைகளை பற்றி அமைச்சரவையில் நீண்டகாலம் பேசப்பட்டு வந்தது. இதனால் சேதனைப்பசளை பயன்படுத்தும் திட்டம் இந்த ஜனாதிபதியினால் முன்னேடுக்கப்பட்டது. இதனை பொறுப்பெடுத்து செய்யக்கூடியவராக எனது நண்பர் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேவும், சசீந்திர ராஜபக்ஸ போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளது.

உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் ஆரூடம் கூறப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் எப்படியாவது எமது உணவுகளை நாம் தயாரித்தாகவேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதியும் விவசாயிகளை பலப்படுத்த உரங்களை இறக்குமதி செய்து விவசாயிகளின் மனங்களின் மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என்று எண்ணியிருப்பதனால் முயற்சிகளை செய்தமைக்காக ஜனாதிபதிக்கும், அமைச்சருக்கும் நன்றி கூறுகின்றோம். இத்தோடு நமது பணிகள் முடிந்துவிடவில்லை.

உலகில் ஆட்டுப்பால், மாட்டுப்பால், ஒட்டகப்பால் என்பன பாவனையில் உள்ளது. எம்மால் மாட்டுப்பாலை மட்டுமே நிறைய பெற முடிகிறது. எமது நாட்டில் நிறைய நிலம், புல்வளம் போன்ற நிறைய வளங்கள் அதற்காக உள்ளது. அதனை பயன்படுத்தி எமது பாவனைகளுக்கான சுத்தமான பாலை பெறுவது மாத்திரமின்றி சேதனை பசளைக்கு அத்திவாரவே மாட்டின் சிறுநீறும், கழிவுகளே. அதனைத்தான் நமது முன்னோர்கள் பாவித்தார்கள். சாதாரணமான ஒரு தோட்டம் செய்பவர் 5-6 மாடுகளை வைத்துக்கொண்டு பராமரிப்பதன் மூலம் நிறைய விளைச்சல் வந்ததை நாம் கண்டுள்ளோம். விவசாய அமைச்சருடன் ஏனையவர்களும் இணைந்து பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். எமது நாட்டில் பருவப்பெயர்ச்சி மழை பெய்கிறது, நிறைய குளங்கள், ஆறுகள் இருக்கிறது ஆனால் நீரைக்கூட நாம் பணம் கொடுத்து வாங்கி குடிக்கிறோம். இவற்றெல்லாம் பற்றி சிந்தியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.