கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இந்த ஆண்டுக்கான சர்வதேச ஆய்வு மாநாடு மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் நிறுவகத்தின் இன்னிய அணியினரின் வரவேற்புடன் ஆரம்பமாகியது.
கட்புல மற்றும் தொழில்நுட்ப கலைகள் துறையின் தலைவர் கலாநிதி சு.சிவரெத்தினத்தின் வரவேற்புரையினை தொடர்ந்து சர்வதேச ஆய்வு மாநாட்டின் தலைவர் கலாநிதி ஜெயரஞ்சினி ஞானதாஸ் அறிமுகவுரையை நிகழ்த்தியிருந்ததுடன் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி பணிப்பாளர் உரையை நிகழ்த்தியிருந்தார்.
இணையவழி தொழில்நுட்பம் ஊடாகவும் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இசைத்துறைத் தலைவர் பேராசிரியர் ஞானா குலேந்திரன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருமலை வளாக முதல்வர் பேராசிரியர் வ. கனகசிங்கம், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறைத் தலைவர் கலாநிதி சுதேஷ் மணிதிலஹே ஆகியோரும் கலந்து கொண்டு இணையவழியில் உரையாற்றியிருந்தனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கட்புல ஆற்றுகைகள் கலைகள் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சௌமிய லியனஹே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் சென்னை கலாசேத்ரா கலைக் கல்லூரியின் வருகைதரு பேராசிரியரும், மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியின் இணைப்பேராசியருமான முனைவர் சே.இரகுராமன் தனது ஆதாரசுருதி உரையை பரதமும் ஆய்வும் என்ற தலைப்பில் இணையவழி மூலமாக நிகழ்த்தினார்.
விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுடைய கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மாலை 2 மணிமுதல் 6 மணிவரை ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வாளர்களால் வாசிக்கப்பட்டிருந்ததுடன், கடந்த 24.11.2021 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஆய்வு மாநாடு இரண்டு தினங்களாக இடம்பெற்று நேற்று (25) மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.