ஊடக அடக்குமுறைகளும், ஊடகவியலாளர்களை தாக்கும் செயற்பாடுகளும் அனுமதிக்க முடியாதவை : சிலோன் மீடியா போரம்

நூருல் ஹுதா உமர்

ஊடக அடக்குமுறைகளும், ஊடகவியலாளர்களை தாக்கும் செயற்பாடுகளும் அனுமதிக்க முடியாதவை. அண்மையில் நாட்டை உலுக்கிய கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால விபத்தையடுத்து இடம்பெற்ற போராட்டங்களின் போது செய்தி சேகரிக்க சென்ற திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் மூவர் தாக்கப்பட்டதோடு அவர்களது ஊடகக் கருவிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட ஊடகவியலார்களுக்கு நீதி கிடைக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என சிலோன் மீடியா போரம் வேண்டுகோள் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அசௌகரியங்களை தாங்கிக்கொண்டு தமது ஊடகப் பணியினை மேற்கொண்டு மக்களின் ஏக்கங்களையும், பிரச்சினைகளையும், தேவைகளையும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளையும் உலகறியச் செய்வதற்காக களத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையிலேயே இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்தவாறு களப் பணியாற்றுகின்ற ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு எவ்வேளையிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் ஊடகப்பணியை தடையின்றி நிறைவேற்ற உரிய சூழல் நாட்டின் சகல ஊடகவியலார்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும் என்பதை இத்தருணத்தில் வலியுறுத்த விரும்புகிறோம். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நட்டஈடும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையும் முன்வைக்கின்றோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளனர்.