பொத்துவில் ஆதார வைத்தியசாலை மருத்துவ ஆய்வுகூடத்திற்கு உயிரியல் இரசாயன பகுப்பாய்வு இயந்திரம் வழங்கி வைப்பு

(ஏ.எல்.றியாஸ்)

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூடத்திற்கு குருதிப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சுமார் மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான உயிரியல் இரசாயனப் பகுப்பாய்வு இயந்திரமொன்று வழங்கப்பட்டுள்ளது.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் விடுத்த வேண்டுகோளுக்கினங்கவே, குறித்த இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி உயிரியல் இரசாயனப் பகுப்பாய்வு இயந்திரத்தினை உத்தியோகபூர்வமாக பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்கும் நிகழ்வு (23) அவ்வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கெளரவ அதிதியாகக் கலந்துகொண்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸிடம் குறித்த இயந்திரத்தினை கையளித்தார்.
இதன்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பிரிவு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், உயிரியல் வைத்திய பொறியியலாளர் ஆர்.ரவிச்சந்திரன் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.