தேர்தலில் தோல்வியுற்றவர்கள் மக்கள் பிரதிநிதிகளை கட்டுப்படுத்த முனைவது வெட்கக்கேடாகவுள்ளது

நிந்தவூர் நிருபர்
பாராளுமன்றத்தில் அரசாங்கம் கொண்டு வருகின்ற சட்டமூலங்கள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் திட்டங்கள் அத்தனையையும் எதிர்க்க வேண்டும் என மக்களினுடைய அங்கீகாரத்தினை தேர்தல் காலங்களில் பொறாத சில கட்சி சார்பானவர்கள் முனைவது வெட்கக்கேடாகவுள்ளது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரஃப
தனது வரவு செலவுத் திட்டத்தின் மீதான ஆதரவு குறித்து கருத்துக் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இந்த நாடு பொருளாதார ரீதியில் ஓர் இக்கட்டான நிலையில் காணப்படுகின்ற போது ஒரு வரவுசெலவுத்திட்டம் கொண்டுவரப்பட்டு இருக்கின்றது என்பதனை விடுத்து அதனை எதிர்க்க வேண்டும் என சிலர் அந்நிய சக்திகளோடு கூட்டுச்சேர்ந்து சில தேர்தலில் தோல்வியுற்றவர்கள் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் சொல்வதுபோல் கேட்டு செயற்படுவதற்கு முயற்சிக்கின்ற விடயமானது மிகவும் கேலிக்கூத்தான ஒரு விடயமாக பார்க்க முடிகின்றது.
முழு உலக நாடுகளுமே பொருளாதார ரீதியான சிக்கலில் காணப்படுகின்ற போது இலங்கையில் மாத்திரம் எதிர்க்கட்சியினரும் அடுத்த தேர்தலில் தாங்கள் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்ற ஒரு சிலரும் இந்த வரவு செலவுத் திட்டத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என முயற்சிப்பது அடிப்படை அறிவற்ற விடயமாகும். சாதாரண பெரும்பான்மை வாக்குகள் மூலம் இந்தப்பாதீட்டை அரசாங்கம் வெற்றி கொள்கின்ற ஒரு சூழ்நிலையை காணப்படுகின்ற போது இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஆதரவளிப்பது என்பது  குறிப்பாக இன்று ஒரு சிலரால் விமர்சிக்கப்படுகின்றதொரு விடயமாக மாறியிருக்கின்றது.
சமூகத்திற்க்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது அரசாங்கத்துடன் சென்று பேச வேண்டும். அந்த அரசை வற்புறுத்தி அவர்கள் விரும்புகின்ற தீர்மானத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால் அந்த அரசாங்கம் கொண்டு வருகின்ற நல்ல பல திட்டங்களை அதன்பிறகு எதிர்க்க வேண்டும் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
ஆட்சிக்கவிழ்ப்பு எனும் கோசத்துடன் இன்று அரசியல் செய்கின்ற எதிர்க்கட்சியினர் தான்,  கடந்த ஆட்சியில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக, இராஜாங்க அமைச்சர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக, இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள். அவர்கள் இந்த நாட்டை சரியாக ஆட்சி செய்யவில்லை என்பதற்காக இந்த நாட்டு மக்கள் ஒரு பெரும் தேசியக் கட்சியை கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட பெற்றுக் கொள்ள முடியாதளவிற்கு சுமார் 69 லட்சம் வாக்குகளை இந்த அரசாங்கத்துக்கு வழங்கி இருந்தமை நாமறிந்த விடயமாகும்.
எனவே உலக நடப்பை அறியாத தங்களது சுய அரசியல் இலாபங்களை அடைந்து கொள்வதற்காக முயற்சிக்கின்ற சக்திகளோடு இணைகின்ற போது இந்தச் சமூகத்தினுடைய பிரச்சினைகள் பிச்சைக்காரனினுடைய புண்ணைப்போல பாதுகாத்து அதனை தொடர்ச்சியாக உபயோகித்து அப்பாவி மக்களினுடைய வாக்குகளை அபகரித்துக் கொண்டு அரசியல் அதிகாரத்தினை அடைந்து கொள்வதற்கு எடுக்கின்ற ஒரு முயற்சியாகவே நான் இவ்விமர்சனங்களை பார்க்கிறேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஷாரஃப் தெரிவித்தார்.