அங்கஜன் எம்.பியின் பரிந்துரையில் யாழ்ப்பாணத்தில் 66மில்லியனில் 15மைதானங்கள் அபிவிருத்தி

த.சுபேசன்
சாவகச்சேரி நிருபர்

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதனின் சிபாரிசுக்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் 66மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 15விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் நாடு முழுவதும் 200பொது விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் அங்கஜன் எம்.பியின் சிபாரிசில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரான்பற்று கலைமகள் வித்தியாலய மைதானம்,நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானம்,கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆவரங்கால் கிழக்கு வீனஸ் விளையாட்டுக் கழக மைதானம்,யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சென்ஸ் மேரி விளையாட்டுக் கழக மைதானம்,தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் வடக்கு கண்ணகை விளையாட்டுக் கழக மைதானம்,பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழகம்,கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொய்ன்ஸ் விளையாட்டுக் கழக மைதானம், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அன்ரனிபுரம் வின்மீன் விளையாட்டுக் கழக மைதானம்,காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட யாழ்ற்றன் கல்லூரி மைதானம் மற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புனித அந்தோனியார் கல்லூரி மைதானம் ஆகிய பத்து பொது விளையாட்டு மைதானங்கள் தலா 5மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படுகின்றன.
அதேவேளையில் நாடு முழுவதும் அனைத்துக் கல்வி வலயங்களையும் உள்ளடக்கி 100பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் அங்கஜன் எம்.பியின் சிபாரிசில் 16மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 5பாடசாலை மைதானங்கள் புனரமைக்கப்படுகின்றன.

யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி மைதானம்,தென்மராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட வரணி மத்திய கல்லூரி மைதானம்,வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மைதானம்,வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட தெல்லிப்பழை மகாஜானா கல்லூரி மைதானம் மற்றும் தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட யா/புங்குடுதீவு மகா வித்தியாலய மைதானம் ஆகிய 5பாடசாலை மைதானங்களே தலா 3.2மில்லியன் ஒதுக்கீட்டில்  அபிவிருத்தி செய்யப்படுகின்றன.கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் குறித்த மைதான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் யாழ் மாவட்டத்தில் இவ்வார தொடக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் பிரத்தியேக செயலாளர் ச.இராமநாதனினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.