அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ”ஒரு வீட்டுக்கு ஒரு மரம்” மர நடுகை வேலைத்திட்டம்

ஏ.எல்.றியாஸ்)

அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் வீடுகளில் பயன் தரும் மரங்களை நடும்பொருட்டு, அக்கழகம் ஒரு வீட்டுக்கு ஒரு மரம் எனும் தொனிப்பொருளில் விசேட மர நடுகை வேலைத்திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளது.

குறித்த மர நடுகை வேலைத்திட்டத்திற்கமைவாக, கழக உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கழகத்தின் முகாமையாளர் ஏ.எல்.றிம்சான் தலைமையில் (21) அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ், கழகத்தின் ஆலோசகரும், ஊடகவியலாளருமான ஏ.எல்.றியாஸ், உபதலைவர் எஸ்.எல்.முசம்மில், பொருளாளர் ஏ.எல்.றிம்சான், கழகத்தின் சிரேஷ்ட வீரர்கள் பலரும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை வழங்கி வைத்தனர்.

இதன்போது அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் 100 உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகளுடன் சேதனப் பசளையும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.