கல்முனை அபிவிருத்தியில் குறைபாடு : நகர மத்தியில் போராட இறங்கினார்

கல்முனை மாநகர சபை உறுப்பினர் நிஸார் ஜே.பி.

நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்

கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நிஸார் தலைமையில் இன்று (17) மாலை கல்முனை பிரதான பஸ்தரிப்பு நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. கல்முனை மாநகர பிரதான பஸ்தரிப்பு நிலைய அபிவிருத்திக்காக கடலோர பாதுகாப்பு கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமூதாய தூய்மை இராஜாங்க அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 18.7 மில்லியன் ரூபாய் நிதியை கொண்டு புனரமைக்கப்படும் பஸ் நிலையமானது பாவனைக்கு உதவாத முறையில் அமைக்கப்படுவதாகவும், தரமின்றி நீண்டநாள் பாவனைக்கு உதவக்கூடிய வகையில் அமைக்கப்பட வில்லையென்றும் தெரிவித்து சுலோகங்களை ஏந்திக்கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நிஸார், இந்த அபிவிருத்தி திட்டமானது வெறும் கண்துடைப்பாக அமைத்துள்ளது. காபட் அல்லது கொங்கிரீட்டை கொண்டு அமைக்கவேண்டிய இந்த பஸ்தரிப்பு நிலையமானது சிறுவர் பூங்காக்களுக்கு பதிக்கப்படும் சீமந்து கற்களை கொண்டு அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த வேலைகளை தற்காலியமாக நிறுத்த.வேண்டும்   மேலும் மக்களின் வரிப்பணத்தை வீணாக செலவழிக்க யாரையும் அனுமதிக்க முடியாது என்றார்.  இந்த விடயம் தொடர்பில் உரிய அரச உயரதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் கவனத்தில் எடுத்து மக்களின் பாவனைக்கு நீண்டநாட்கள் பாவிக்கக்கூடியவாறு இந்த பஸ்நிலையத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது ஸ்தலத்திற்கு விஜயம் செய்த கல்முனை பொலிஸார் ஆர்பாட்டக்காரர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வருமாறு கலந்துரையாடியதுடன் பொலிஸில் முறையிடுமாறு அறிவுரை வழங்கி களைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டதுடன் அவர்கள் தங்கியிருந்த சுலோகங்களையும் எடுத்து சென்றனர்.