இலங்கை இராணுவத்தில் காணப்படும் தொழில்துறை பதவி வெற்றிடங்களுக்கான மூன்றாம் கட்ட நேர்முகப்பரீட்சை

வி.சுகிர்தகுமார்

  இலங்கை இராணுவத்தில் காணப்படும் 50 இற்கும் மேற்பட்ட தொழில்துறை பதவி வெற்றிடங்களுக்கான மூன்றாம் கட்ட நேர்முகப்பரீட்சை நேற்று முதல்  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 18 தொடக்கம் 26 வரையிலான தொழில் அற்ற இளைஞர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் கீழ் திறன் அடிப்படையிலான தொழில் வாய்ப்பை வழங்குவதுடன்; பல்வேறுபட்ட திறன் அடிப்படையிலான நிரந்தர அரச தொழில் ஒன்றை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தில் காணப்படும் இசைக் கருவி வாசிப்பாளர், கனிஷ்ட நிருவாக உதவியாளர், கணினி வன்பொருள் உதவியாளர், வைத்திய உதவியாளர், தாதி மருந்தகர் உள்ளிட்ட 50 வகையான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் மூன்றாம் கட்ட  நேர்முகப் பரீட்சை இடம்பெற்று வருகின்றது.
இந்த நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்கின்ற இளைஞர்கள் வெற்றிடமாகவுள்ள 50 இற்கு மேற்பட்ட பதவிகளில் விரும்புகின்ற  பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கான தகுதிகளாக, விண்ணப்பதாரிகள் இலங்கைப் பிரஜைகளாக இருத்தல், திருமணமாகாதவர்களாக இருப்பதுடன், ஆண்கள் 18-26; குறைந்தது 5’4′ உயரமுடையவர்களாகவும், குறைந்தது; இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவிகள் யாவும்;  ஓய்வூதியம், மற்றும் இலவச மருத்துவ செலவு, இலவச பிரயாண செலவு, சீருடை மற்றும் உணவு போன்ற பல இலவச சலுகைகளையும் உள்ளடக்கியதுடன் குறைந்த பட்ச திரட்டிய சம்பளம் 50000 ரூபாய் வழங்கப்படுகின்றது.
இதேநேரம் இதற்கு முன்னதாக நடைபெற்ற நேர்முகப்பரீட்சையில் தெரிவான பல இளைஞர் யுவதிகள் பயிற்சியின் பின்னராக தொழில் வாய்ப்பில் இணைந்து கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.