பொத்துவில் பிரதேசத்தில் விஷேட சுற்றிவளைப்பு

எம்.ஏ.றமீஸ்)
டெங்கு நோயினைக் கட்டுப் படுத்தும் நோக்கிலும், மக்களுக்கு சிறந்த உணவு வகைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மூலம் இன்று விஷேட சுற்றி வளைப்பு  மேற்கொள்ளப்பட்டது.
பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.யு.அப்துல் சமட் தலைமையிலன சுகாதாரத் துறை அதிகாரிகள் இச்சுற்றி வளைப்பில் கலந்து கொண்டனர். பொத்துவில் சந்தைப் பகுதி மற்றும் அறுகம்பை பிரதேசம் போன்றன இவ்வாறு சுற்றி வளைப்புக்குட்படுத்தப்பட்டன.
இச்சுற்றிவளைப்பின் போது டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களைக் கொண்டிருந்த வீட்டு உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டு குறுகிய கால அவகாசத்தில் சிறந்த சுற்றாடலை ஏற்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இதுதவிர, பொத்துவில் சந்தைப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் அறுகம்பை பிரதேசத்தில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பயன்படுத்தும் உணவகங்கள்; போன்றன இவ்வாறு திடீர் சுற்றி வளைப்பிற்கு உட்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சுகாதார ஆலோசனைகளும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இச்சுற்றி வளைப்பின்போது பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பழவகைகள், உணவுப் பொருட்கள், காலாவதியான உணவுப் பொருட்கள், உணவு விற்பனை சட்ட திட்டங்களுக்கு அமையாத பலசரக்குப் பொருட்டகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றன பெருமளவில் கைப்பற்றப்பட்டன.
இதன்போது சுகாதார விதிமுறைகளுக்கு உட்படாத வகையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன், சில உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கு உணவகங்களின் குறைபாடுகளை நிவர்தி செய்யும் வகையில் அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன.
இப்பரிசேதனையின் போது உணவகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்கள், வெதுப்பகங்கள், பழவிற்பனை நிலையங்கள், மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள், வீதியோர விற்பனைக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவு கையாளும் நிலையங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. இச்சுற்றி வளைப்பின்போது மனிதப் பாவனைக்கு உதவாத பெருமளவிலான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழித்தொழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.