பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பெளத்தாலயம் அமைக்கப்படவுள்ளது.

கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்
இ.சுதாகரன்
பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பெளத்தாலயம் அமைக்கப்படவுள்ளது. அப்படியென்றால் பெரும்பான்மையினக் குடியேற்றம் நடைபெற வாய்ப்புள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

கிழக்கில் தமிழர் வாழும் பகுதிகளில் பெளத்த விகாரைகளின் உருவாக்கம் தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து பேரினவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பல தமிழ் மக்கள் 1958,1983 களில் பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லையிலுள்ள வடமுனை, ஊத்துச்சேனைக் கிராமங்களில் குடியேறியுள்ளனர். இந்த குடியேற்ற விடயத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகம், பொறியியலாளர் மரியசிங்கம் போன்றவர்கள் பக்க துணையாக இருந்துள்ளார்கள். அதே வேளை அத்துமீறிய பெரும்பான்மையினரின் குடியேற்றத்தை அகற்றுவதில் முன்னாள் அமைச்சர் தேவநாயகமும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.
இன்றைய நிலையில் வடமுனையில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள நெளுக்கல் மலையில் பெளத்தாலயம் ஒன்றை அமைப்பதற்குக் கிழக்கு மாகாண ஆளுனர் துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட சொறுவில், கறுப்பளை, முத்துக்கல், மன்னம்பிட்டி, வெலிக்கந்த போன்ற கிராமங்களில் இருந்து உயிர் இழப்புகள், சொத்திழப்புகளுக்கு மத்தியில் வடமுனை ஊத்துச்சேனையில் குடியேறிய மக்களை நோக்கி மேலுமொரு பெரும்பான்மையினக் குடியேற்றம் துரத்தி வருகிறது.
பிக்குகள், தொல்லியலாளர்கள், ஆளுனர் தரப்பினர், வீதியபிவிருத்தி அதிகார சபையினர் அங்கு அடிக்கடி பிரசன்னமாகி வருகின்றனர். மயிலத்தமடு, மாதவணை, காரமுனை, நெளுக்கல் மலை என்று மட்டக்களப்பு மண்ணை ஆக்கிமிப்பதற்கான திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்ந்தும் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கின்றன. எத்தனையோ வீதி அபிவிருத்தித் திணைக்கள வீதிகள் உடைந்து சிதைந்து கிடக்க காட்டின் ஊடாக நெளுக்கல் மலைக்கான புதிய வீதி, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் அமைக்கப்படவுள்ளது.
வியத்மக அமைப்பு சார்ந்தவர்கள் ஓரின சிங்கள மக்களை மாத்திரம் திருப்திப்படுத்தினால் அடுத்த தேர்தலிலிலும் பொதுஜனப் பெரமுனக் கட்சியை வெல்லச்செய்து விடலாம் என்ற மனப்பாங்குடன் செயற்படுகின்றனர். அதே வேளை அரணகம்விலயில் இருந்து 23 கிலோமீற்றர் வீதி மயிலத்தமடு புலிபாஞ்சகல் நோக்கி வீதி அபிவிருத்தி அதிகாரசபை மூலம் அமைக்கப்படுகிறது. இவையெல்லாம் பெரும்பான்மை சமூகக்குடியேற்ற மையமானதாகவே உள்ளது.
தொல்லியலாளர்களும், வியத்மக அமைப்பினரும் தமிழ் பேசும் மக்களைத் தொல்லைப்படுத்துவதென்றே சபதம் எடுத்து விட்டார்கள். இப்படியான நிலையில் பொதுசனப் பெரமுனக் கட்சியிடம் உள்நாட்டுப் பிரச்சினைகளை அதிகரிப்பதற்கான பொறிமுறைகள் இருக்கின்றனவேயொழிய, பிரிச்சினைகளைத் தீர்ப்பதற்கான எந்தப் பொறிமுறையும் இல்லை.
இவற்றை விட வடமுனைக்குளம், மீராண்டவில், காடுகள் தோறும் மண்ணகழ்வுகள் பாரியளவில் நடைபெறுகின்றன. தடுக்க வேண்டிய ஆளுங்கட்சித் தமிழ் அரசியல்வாதிகள் மண்ணகழ்வு வியாபாரத்தில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். இவர்கள் தமது ஆதரவாளர்கள், உறவினர்களுக்கு மண் அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொடுத்து வருவாய்களில் பங்காளிகளாக உள்ளனர். மண்ணகழ்வுகளில் பொலன்னறுவை மாவட்டத்தவர்கள் 75% வீதமும் மட்டக்களப்பு மாவட்டத்தவர்கள் 25% வீதமும் மண் வியாபாரம் செய்கின்றனர். மட்டக்களப்பு வளத்தை அழித்தாவது கோடீஸ்வரர்களாக மாற வேண்டும் என்ற இலக்குடன் அதிகார அரசியல் புள்ளியர்கள் செயற்படுகின்றனர்.
ஆனால் உள்ளூரில் உள்ளவர்கள் உழவு இயந்திரம் மூலமாகக்கூடத் தேவைகளுக்கு மண்ணைப் பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இவற்றை விடவும் வடமுனை ஊத்துச்சேனை மக்களில் கணிசமானவர்கள் விவசாயிகளாவர். அவர்களது விவசாய நிலங்கள் பல ஏக்கர்கள் வனவளவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தமது பற்றைகள் மண்டியுள்ள விவசாய நிலங்களை அகற்றச் சென்றால் அங்கு வனவளஅதிகாரிகளால் இடையூறுகளும் விளைவிக்கப்படுகிறது. ஆனால் வசதி படைத்தவர்கள் கனரக வாகனங்களால் காடுகளைத் தள்ளுகின்றபோது கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
மேலும் இக்கிராம மக்களால் வழிபட்டு வந்த வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சொந்தமான வயல் காணி 21 ஏக்கர்கள் அடாத்தாக தனிப்பட்டவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை, யானைகளின் தொல்லை, போக்குவரத்து வசதி இன்மை, பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, தரம் 11 வரை கற்பதற்கான பாடசாலைகள் இல்லாமை, தினசரி இயங்கக்கூடிய வைத்தியசாலை இல்லாமை, விச ஜந்துகளினால் உயிராபத்து என பல்வேறு பிரச்சினைகளுடன் எல்லைப்புற மக்கள் போராடி வருகின்றனர்.