மட்டக்களப்பில்இந்திய உர உற்பத்தியாளர்களால்நனோ நைதரசன் பயன்பாட்டு பயிற்சி நெறி

(ந.குகதர்சன்)

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் மூலம் நஞ்சு தன்மையற்ற நாடு எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விழிப்பூட்டல் வேலைத்திட்டம் நாடுபூராவும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகளுக்கு யூரியா இரசாயன உரத்திற்கு பதிலாக இந்தியாவிலிருந்து அரசாங்கம் இறக்குமதி செய்த நஞ்சற்ற நனோ நைதரசன் திரவப்பசளையை அறிமுகப்படுத்தல் மற்றும் பாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கானது விவசாய இராஜாங்க அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிகழ்வானது வாழைச்சேனை கமநல சேவை நிலையத்தில் கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரஷீத் தலைமையில் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனத்தின் நனோ நைதரசன் உர உற்பத்தியாளரான IFFCO நிறுவனத்தின் விவசாய சேவைகள் தலைமை அதிகாரி கலாநிதி. தருனேந்து சிங், விசேட நிபுணர் கலாநிதி.அனில் குமார், விசேட வெளிக்கள பிரதிநிதிகளான சுப்ரமணியன் மாரியப்பன் மற்றும் சிவலிங்கம் பரஞ்சோதி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு உற்பத்தியை அறிமுகம் செய்ததுடன் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தனர்.

அதனை தொடர்ந்து வாழைச்சேனை அடம்படிவட்டவான் கண்டத்திலுள்ள வயற்காணி ஒன்றினுள் நனோ நைதரசன் திரவப்பசளை எவ்வாறு விசிற வேண்டும் என்பது தொடர்பான செய்முறை பிரயோக பயிற்சி ஒன்றும் அவர்களால் செய்து காட்டப்பட்டது.

இந்நிகழ்வில் விவசாய அமைச்சின் ஒருங்கிணைப்பாளர், விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர், விவசாய போதனாசிரியர்கள், கமநல சேவைகள் நிலைய உத்தியோகத்தர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பெருமளவான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் நச்சுத் தன்மையற்ற நாடு என்னும் தேசிய வேலைத்திட்டத்தை தாம் பெரிதும் வரவேற்பதாக எமக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போது குறிப்பிட்டுள்ளார்.