மட்டக்களப்பு சாரணர் சங்கத்தின் சாரணர்கள் 26 பேருக்கு ஜனாதிபதி சாரணர் விருது அணிவிக்கும் நிகழ்வு

(சுமன்)

இலங்கை சாரணர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட சாரணர் இயக்க உறுப்பினர்களுக்கு சாரணர் இயக்கத்தின் அதியுயர் விருதான ஜனாதிபதி சாரணர் விருது அணிவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட சாரணர் ஆணையாளர் வி.பிரதீபன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதான ஆணையாளர் ஜனபிரிட் பெர்னான்டோ, மாவட்ட அரசாங்க அதிபரும், மட்டக்களப்பு சாரணர் சங்கத்தின் தலைவருமாகிய கே.கருணாகரன், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி, மாவட்ட உதவி சாரணர் ஆணையாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விப் புலத்தினர் சாரணர் மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எட்டு பாடசாலைகளைச் சேர்ந்த விருதுக்கு தகுதி பெறும் 26 மாணவர்களுக்கு இதன்போது ஜனாதிபதி சாரணர் விருது இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதான ஆணையாளரால் அணிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது