வன்முறைத் தீவிரவாதத்தைப் புரிந்து கொள்ளல் எனும் தலைப்பில் சர்வமத ஒன்றியத்தினால் பயிற்சி பட்டறை!

(கல்லடி நிருபர்) மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் அனுசரணையில்  நிறுவன இயக்குனர் அருட்பணி ஏ.ஜேசுதாசன் அடிகளாரின் தலைமையில் மட்டக்களப்பு அமேரிக்க மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற  ஒருநாள் பயிற்சி பட்டறையில்  மட்டக்களப்பு மாவட்டத்தின்  சர்வமத  தலைவர்கள், மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் என சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக குறிப்பிட்டளவிலானோர் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தில்  இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில்  பல நல்லிணக்க சமூக செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற மாவட்ட சர்வமத ஒன்றியம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பாடல்களை கொண்டுள்ள சமய தலைவர்கள், அரச அலுவல உத்தியோகத்தர்கள், சர்வமத ஒன்றிய  உறுப்பினர்கள் எவ்வாறு மக்களிடையில் வன்முறைத் தீவிரவாதத்தைப் புரிந்து கொள்ள வைத்தல் தொடர்பாக  தெளிவுபடுத்தும் ஒருநாள் செயல்முறை பயிற்சி பட்டறை முன்னெடுக்கப்பட்டது.
இந்த பயிற்சி பட்டறையில் வளவாளர்களாக தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் தலைமைச் செயற்பாட்டு அதிகாரி பெனிக்னஸ், மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்பணி ராஜன் ரொஹான், காத்தான்குடி பிஸ்மி கல்வி நிறுவன தவிசாளர்  எம்.பி.எம்.பிர்தவுஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.