பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் மகிழ்ச்சிப் பெருவிழா

பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் பாராட்டு
(ஏ.எல்.றியாஸ்)
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பொத்துவில் ஆதார வைத்தியசாலை பீ தரத்திலிருந்து ஏ தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, வைத்தியசாலை தரமுயர்வினை கொண்டாடும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மகிழ்ச்சிப் பெருவிழா வியாழக்கிழமை (11) வைத்தியசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் கௌரவ அதிதியாகவும், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.அப்துல் றஹீம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பிரிவு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த மகிழ்சிப் பெருவிழாவில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர், பிரதேச சபை உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த வைத்தியசாலையினை தரமுயர்த்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், அதற்கான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன் ஆகியோர் இவ்விழாவின் போது பொண்ணாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலை தரமுயர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தினை பாராளுமன்ற உறுப்பினரதும், சுகாதார உயரதிகாரிகளினதும் கவனத்திற்கு கொண்டு சென்று, வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பிலும் மிகத்திட்டமிட்டு, செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற, வைத்திய அத்தியட்சகர் டொக்டர் றிபாஸின் சேவைகளைப் பாராட்டி வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் இந்நிகழ்வின் போது பொண்ணாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.