அக்கரைப்பற்று பிரதேசத்தில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று மின்சாரத்தூண்கள் சரிந்து வீழ்ந்துள்ளன

வி.சுகிர்தகுமார்
  அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்றிரவு பெய்த பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக கண்ணகி கிராமத்திற்கு அன்மித்த வயல் பிரதேசத்தில் நடப்பட்டிருந்த நான்கு பாரிய மின்சாரத்தூண்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.
11000 ஆயிரம் வோல்ட் மின்சாரத்தை கொண்டு செல்லும் மின்கம்பிகளை தாங்கி நிற்கும் மின்சாரத்தூண்களே இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளன.
அத்தோடு மின்கம்பிகளும் வயல் பிரதேசத்தில் அறுந்து வீழ்ந்துள்ளன.
நேற்றிரவு 8 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் கண்ணகிகிராமத்தில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட அக்கரைப்பற்று மின்சார சபையின் மின் அத்தியட்சகர் ரி.சுலக்சன் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட காரணத்தால் இன்று காலை முதல் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய அம்பாரை மின்சார சபையின் திருத்த பணிகளுக்கான ஊழியர்களையும் மேலதிகமாக அக்கரைப்பற்று மின்சார சபை ஊழியர்களுடன் இணைத்து கொண்டு களத்தில் நின்று மின்சார திருத்தப்பணிகளை அவர் மேற்பார்வையில் மேற்கொண்டு வருகின்றார்.
இதன் காரணமாக இன்று மாலை அளவில் மின்சாரத்திருத்தப்பணிகள் நிறைவடைந்து கண்ணகிகிராமத்திற்கான மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டு வழமை நிலைக்கு திரும்பும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.