வலுவடையும் அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினை : வீதிக்கு இறங்கிய 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள்

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
அதிபர் ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சனை நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்ற நிலையில் திருகோணமலையில் பெற்றோர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்

இன்று (03) திருகோணமலை – அனுராதபுர பிரதான வீதியில் மிஹிந்து புர பிரதேசத்தின் 100 மேற்பட்ட பெற்றோர்கள் பிரதான வீதிக்கு இரங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்

இவ் ஆர்ப்பாட்டம் திருகோணமலை மிஹிந்த புர  மகாவித்தியாலயத்தின் மாணவர்களின் பெற்றோர்களினால் ஏற்ப்பாட்டு செய்யப்பட்டு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்

இதன்போது அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்த்துவை,ஆசிரியர்களையும் அதிபர்களையும் அவமதிக்காதே,இணையவழி கல்வியினை சீர்செய்,ஆசிரியர்கள் நம் தெய்வம்  தெய்வங்களை அவமதிக்காதே மற்றும் மிஹிந்த புர மகாவித்தியாலயத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

மிஹிந்த புர  வித்தியாலய பெற்றோர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கும்போது

மிஹிந்த புர மகாவித்தியாலயத்தின் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக தாம் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்றையதினம் ஈடுபட்டுள்ளதாகவும் ஒரு ஆசிரியரினால் மாத்திரமே ஒரு வைத்தியரை, பொறியியலாளர் மற்றும் சட்டத்தரணியினை  உருவாக்க முடியும் அவ்வாறான ஒரு ஆசிரிய குலாமின் பிரச்சனைகளை இந்த அரசாங்கம் தீர்த்து வைக்கப்படாமல் இருப்பது பெரிதும் கவலைக்குரிய விடயமாகவும் பாரதூரமான விடயமாகும் எனவே அதிபர் ஆசிரியர்கள் சார்பாக இன்றைய தினம் பெற்றோர்களாகிய நாங்கள் வீதியில் இறங்கி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக இதன்போது தெரிவித்தார்

மேலும் கொழும்பு போன்ற தலைநகரங்களில் அவர்களின் வாழ்வாதாரத்துடன் ஒப்பிடும்போது இணையவழி கற்பித்தல் நடைமுறைக்கு சாதகமாக இருந்தாலும திருகோணமலை மாவட்டத்தில் அதிகம் கடல் தொழில் மற்றும் விவசாயத்தை நம்பியே குடும்பங்கள் அதிகம் காணப்படுவதனால் இணையவழி கற்பித்தலுக்கான செலவு அதிகரித்துள்ளதாகவும் இதனால் பெற்றோர்கள் பெரிதும் அவஸ்தை படுவதாகவும் தெரிவித்தார்

நாட்டின் அபிவிருத்தியில் அதிபர் ஆசிரியர்களின் பங்களிப்பும் பெரிதும் காணப்படுவதனால் அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்குமாறு இன்றைய தினம் அமைதி ஆர்ப்பாட்டமாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் எதிர்வரும் நாட்களில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக வலுப் பெறுவதற்கு இந்த அரசாங்கம் வழி வகுக்காமல் உடன் இப்  பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு இதன்போது வேண்டுகோள் விடுத்திருந்தார்

இவ்வாறு ஆர்ப்பாட்டம் சமூக இடைவெளியை பேணி சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக அமைதி ஆர்ப்பாட்டமாக இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.