வடக்கு கிழக்கு இணைந்த தீர்வே நிரந்தனமானது என்பதை ஹக்கீம் பகிரங்கமாக கூறுவாரா ?

மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன். 
(இ.சுதாகரன்)
வடக்கு கிழக்கு இணைந்த தீர்வுதான் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை நிலை நாட்டும் என்பதை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஹக்கீம் பகிரங்கமாக தெரிவிப்பாரா, தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை முழுமையாக ஏற்பதற்கு உள்ளார்ந்தமாக தயார் எனில் இரண்டு விடயங்களை பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டும். ஒன்று கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதையும் இணைந்த வடக்கு கிழக்கு தாயகத்தில் அரசியல் தீர்வை ஏற்றுள்ளார் என்பதையும் பகிரங்கமாக கூறுவராயின் மாத்திரமே இவரின் கருத்தை ஏற்கமுடியும். இல்லையெனில் வெறும் பம்மாத்துக் கருத்தாகவே இதனை நோக்கலாம் என மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதித் தலைவருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
யாழ். தனியார் விடுதியில் தமிழ்பேசும் மக்கள் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடலில், தமிழ் – முஸ்லிம் தரப்புகள் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் உணரப்பட்டுள்ளதென முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருப்பது தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் முஸ்லிம் தரப்புகள் ஒன்றிணைவதன் மூலம் இணைந்த வடகிழக்கில் பலமான ஒற்றுமையை காட்டமுடியும் என்பதை பல தடவை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமிடமும் அவர் சார்ந்த முஸ்லிம் உறுப்பினர்களிடமும்  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஐயா 2004, ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை தெரிவித்திருந்தபோதும் இதை நிராகரித்தவர்கள் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிதான். இப்போது காலம் கடந்து புதிதாக தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை உணரப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.
தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தியே தந்தை செல்வா 1949, இல் இலங்கைத் தமிழரசு கட்சியை உருவாக்கி தமிழ்பேசும் மக்கள் என்ற சொல்லாடல் மூலமாக தமிழ் முஸ்லிம் மக்களை இணைத்து அகிம்சை ரீதியான அரசியல் போராட்டங்களை முன்னெடுத்தார்.
இதன் மூலமாக பாராளுமன்ற தேர்தல்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்களை இலங்கைத் தமிழரசு கட்சியில் உள்வாங்கி பல தேர்தல்களில் சிலரை வெற்றிபெற வைத்தார். தமிழர் விடுதலை கூட்டணி 1976, மே,14, இல் வட்டுக்கோட்டை தீர்மானம் எடுத்தபோதும் முஸ்லிம் அரசியல் தலைவர் மறைந்த அஷ்ரப்பும் அதற்கான பூரண சம்மதம் தெரிவித்து பணியாற்றினார். அதன் பின்னரான இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகி 36, விடுதலை இயக்கங்கள் உருவாகிய காலத்தில் பல தமிழ் இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர்கள் விரும்பி இணைந்து செயற்பட்ட வரலாறுகள் இருக்கின்றன.
அதன் பின்னரான காலத்தில் இலங்கை அரசின் பிரித்தாளும் தந்திரத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே விரிசலை உண்டாக்கும் நோக்கில், இஸ்லாமிய இளைஞர்களை ஊர்காவல் படைகளில் இணைத்து தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதன் உச்சக்கட்டமாக 1990, இல் கிழக்கு மாகாணத்தில் பல தமிழ் இனப்படுகொலைகளுக்கு முஸ்லிம் ஊர்காவல் படையினர் நேரடியாக துணைபோன வரலாறுகளும் இருக்கிறது.
2004, இல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 22, ஆசனங்களுடன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டமைப்பு இணைந்த வடக்கு கிழக்கு அரசியல் தீர்வு விடயமாக பல சந்திப்புகளை பாராளுமன்றில் சம்பந்தன் ஐயா தலைமையில் நடத்தினோம். அதில் நானும் பங்கேற்றேன். அதன் பின்னர் 2009, மே,18, முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னரான காலத்திலும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் வடக்கு கிழக்கு அரசியல் தீர்வில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம், அவைகளை தட்டிக்கழித்தவர்கள் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பதை மறுக்க முடியாது.
2015, இல் நல்லாட்சி அரசில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியாக செயற்பட்டு அரசியல் தீர்வு, அரசியலமைப்பு மாற்றம் வரவேண்டும் என்பதற்காக இணக்கப்பாட்டு அரசியலில் ஈடுபட்டவேளை, கிழக்கு மாகாண சபையிலும் நான்கு கட்சிகள் சேர்ந்து ஆட்சியமைத்தபோது முதலைமச்சரும் இன்னோர் அமைச்சரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இரண்டு அமைச்சும் பிரதி தவிசாளர் பதவியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும், ஒரு அமைச்சர் பதவி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும்
குழுக்களின் தலைவர் பதவி ஐக்கிய தேசிய கட்சிக்கும் வழங்கப்பட்டு இரண்டு வருடங்கள் மட்டும் இணக்கப்பாட்டு ஆட்சி இடம்பெற்றது.
அப்போது கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் வாய்ப்புகள் இருந்தபோது அதனை தடுத்தவர்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள். அதில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஷ் பகிரங்கமாகவே பல தடவை எதிர்த்து தடைகளை தொடர்ந்தும் செய்தார். இந்த நிலையில் தலைவர் ஹக்கீமும் உடந்தையாக இருந்து இன்று வரையும் கல்முனை வடக்குச் செயலகத்தை தரம் உயர்த்த விடாமல் முட்டுக்கட்டை போடும் ஹக்கீம், இன்று தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை உணர்ந்துள்ளார் என்பதை எந்த வகையில் நம்பமுடியும்.
அவர், தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை முழுமையாக ஏற்பதற்கு உள்ளார்ந்தமாக தயார் எனில் இரண்டு விடயங்களை பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டும். ஒன்று கல்முனை வடக்கு செயலகத்தை தரம் உயர்த்த எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதையும் இணைந்த வடக்கு கிழக்கு தாயகத்தில் அரசியல் தீர்வை ஏற்றுள்ளரார் என்பதையும்
பகிரங்கமாக கூறுவராயின் இவரின் கருத்தை ஏற்கமுடியும். இல்லையெனில் வெறும் பம்மாத்துக்கருத்தாகவே இதனை நோக்கலாம் என மேலும் கூறினார்