மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள்!!

தீபாவளி பண்டிகை காலத்தில் பொது மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள்!!
தீபாவளி பண்டிகை காலத்தில் பொது மக்களை மிகுந்த அவதானத்துடனும் சமூகப் பொறுப்புடனும் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று தொடர்பான அச்சம் முழுமையாக நீங்காத நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொரோனா தொற்று முழுமையாக நீங்காத நிலையினை கருத்திற்கொண்டு பொது மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான  கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைவடைந்து வரும் நிலை காணப்பட்டாலும், தீபாவளி பண்டிகைக் காலத்தில் மக்கள் கூட்டமாக வெளியில் நடமாடுவது  அவதானிக்கப்படுவதனால் அவ்வாறான இடங்களிற்கு செல்லும் போது  சுகாதார பாதுகாப்புடன் செயற்பட்டு  கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக பொது மக்களை மிகவும் அவதானத்துடன் செயற்படும்படி அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனவே மக்கள் இவ் விசேட பண்டிகை காலங்களில் சனநெரிசல் அதிகமான இடங்கள் மற்றும் ஆலயங்கள் போன்றவற்றிற்கு செல்வதை இயன்றளவு தவிர்த்து வீட்டிலிருந்தவாறே தத்தமது குடும்பத்தாருடன் மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும், அவசர தேவைகளுக்காக மாத்திரம் வெளியில் செல்வது சாலச் சிறந்ததாக அமையுமெனவும், அவ்வாறு செல்லும் போது கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும் எனவும்  அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இம்முறையும் எளிமையான முறையில் பண்டிகைகளை பொதுமக்கள் கொண்டாடுவதுதான் கொரோனா தொற்றை குறைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என சுகாதார துறையினர் மக்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
கொரோனா தொற்றினை நமது இலங்கையில் இருந்து இல்லாது ஒழிப்பதற்கு ஒவ்வொரு தனி மனிதரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி குறைவடைந்துவரும் கொரோனா பரவலை முற்றாக இல்லாதொழிப்பதோடு, சுதாதார துறையினரின் அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகளிற்கு அமைவாக  தங்களது நாளாந்த கருமங்களை ஆற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.