திருடன் கையில் பொலிஸ் வேலை கொடுக்கும் அரசாங்கம்.(பா.உ) ஜனா)

பௌத்தம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் மீது பகிரங்கமாக தமது வெறுப்புணர்வை கொட்டித் தீர்த்து வருகின்ற ஒருவரை பல்லின மக்களுக்கான சட்டத்தினை நிர்ணயிக்கப் பொறுப்பளிப்பது திருடன் கையில் பொலிஸ் உத்தியோகத்தைக் கொடுப்பதற்கே ஒப்பானதாகும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

கொலைக் குற்றவாளிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுவதும். அவர்களுக்கு அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுவதும், நாட்டின் நீதியை மதிக்காதவர் சட்டம் தயாரிப்பதற்கு நியமிக்கப்படுவதும் இலங்கைக்குப் புதிய விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி மற்றும் அதற்குத் தலைமைத்துவம் வழங்க கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளமை போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுடைய பாரம்பரிய தாயகம் என்ற நிலைப்பாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையில் காலங்காலமாக செயற்படும் கொள்கையே இலங்கையின் பெரும்பான்மை சிங்களவர்களிடம் இருந்து வந்திருக்கிறது. இந்த வகையில் சிங்கள இனவாதத்தின் ஒருமித்த செயற்பாடே ஒரேநாடு ஒரே சட்டம். இத்திட்டம் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும். இல்லையேல் நாடு பாரதூரமான விளைவுகளையே சந்திக்கும்.

நான் ஒரு சிங்கள இனவாதி, சிங்களப் பெரும்பான்மை மக்களின் ஜனாதிபதி என்பதை நிரூபிக்கும் வகையிலேயே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தொடர்ச்சியாகச் செயறபட்டுவருகிறார். கொவிட் பரவல், பொருளாதார நெருக்கடி, விவசாயிகளது பிரச்சினைகளென மக்களது விடயங்களெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.

2019ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றவுடனேயே கிழக்கு மாகாணத்துக்கென ஜனாதிபதி செயலணியொன்றினை தொல்பொருள் பாதுகாப்புக்கென தாபித்திருந்தார். அதனால் ஏற்பட்ட குழப்பங்கள், பிரச்சினைகள் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. மாகாண சபைகளினுடைய அதிகாரங்களைக் குறைப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு மாகாண சபையை இல்லாமற் செய்கின்ற முனைப்புகளும் இருக்கின்றன.

இந்த நிலையில் சிறுபான்மை மக்களினுடைய இருப்பிலும், அவர்களுடைய நம்பிக்கையிலும் மண்ணைப்போடும் ஒரு செயற்திட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியினுடைய சிந்தனைப் போக்கும், ஆதிக்கமும் இதன் மூலம் வெளிப்பட்டு நிற்கிறது. இதன் உட்பொருளை நாம் எல்லோரும் விளங்கிக் கொண்டு விமர்சிக்காமலும் அதற்கெதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபடாமலும் இருக்க முடியாது.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணி ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் விமர்சிப்பவர்கள் ஏதோ அதற்கு ஞானசார தேரர் தலைமையாக நியமிக்கப்பட்டமைதான் பிரச்சினை என்பதுபோல் காண்பிக்க முயல்கின்றனர்.

கொலைக் குற்றவாளிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுவதும். அவர்களுக்கு அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுவதும், நாட்டின் நீதியை மதிக்காது, சட்டத்துக்கு விரோதமாகச் செயற்பட்டவர் சட்டம் தயாரிப்பதற்கு நியமிக்கப்படுவதும் இலங்கைக்குப் புதியவிடயமல்ல.

இலங்கை சிங்கள, தமிழ், முஸ்லிம் என பல்லின மக்களைக் கொண்ட பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவம் என பல மதங்களைப் பின்பற்றுகின்ற, தமிழ் சிங்களம் என பல மொழிகளைப் பேசுகின்ற பல கலாசார பின்பற்றலைக் கொண்டுள்ள நாடாகும்.

இங்கு ஒவ்வொரு இனத்திற்கென்று பாரம்பரியமான தேசவழமை, முற்குக, கண்டிய, ஷரியா சட்டங்கள் காணப்படுகின்றன. இவற்றினைக் கவனத்திலெடுக்காத வகையில் சட்டங்கள் அமைக்கப்படுவது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

மேலைத்தேயத்தவர்களது வருகையின் காரணமாக உருவான சட்ட ஒழுங்குகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பின்னர் பல சிக்கல்களை எதிர் கொண்டது. ஆனால் சுதந்திரத்துக்குப் பின்னர் ஆங்கிலேயர்களால் ஒருங்கிணைத்து சிறுபான்மை மக்களின் பாதுக்காப்புக்கான ஏற்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட சட்டம் இப்போதில்லை. அதனை பெரும்பான்மைத் தேசியம் இல்லாமல் செய்து விட்டது. அதன் பிரதிபலிப்பாக சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எவ்வாறானாலும் சிறுபான்மை மக்களை பொருட்படுத்தாத அவர்களை அனுசரிக்காத நாட்டின் தலைவருடைய செயற்பாடு வீண் விளைவுகளைக் கொண்டுவரும்.

நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற சட்டத்தினை உருவாக்குவதற்கு என்ன தேவை ஏற்பட்டது என்பதனை இந்த இடத்தில் கேட்க விரும்புகின்றேன்.

நாட்டில் இன முறுகல் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய ஜனாதிபதி அதனை வலுப்புடுத்தும் வகையிலான செயற்திட்டங்களை உருவாக்குகிறார்.

வெளிப்பூச்சில் வெளிநாடுகளுக்கு ஒரு முகத்தையும், நாட்டுக்குள் சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கு பேரினவாத முகத்தையும் காண்பிக்கும் ஜனாதிபதி பௌத்தம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் மீது பகிரங்கமாக தமது வெறுப்புணர்வை கொட்டித் தீர்த்து வருகின்ற ஒருவரை பல்லினம் பல் சமய, பல மொழி பேசுகின்ற மக்களிற்கு சட்டத்தினை நிர்ணயிக்கப் பொறுப்பளிப்பது ஏதோ திருடன் கையில் பொலிஸ் உத்தியோகத்தைக் கொடுப்பதற்கே ஒப்பானதாகும்.

நாட்டில் இராணுவ மயப்படுத்தல், சிங்கள மயப்படுத்தல், ஆதிக்க ரீதியான செயற்பாடு என பல குற்றச்சாட்டுக்கள் இருந்து கொண்டிருக்கையில் மேலும் ஒரேநாடு ஒரே சட்டம் இன்னுமொரு படி மேலே நகர்த்தப்படுவது இலங்கை மக்களின் குறிப்பாக சிறுபான்மை மக்களின் சாபக்கேடாகும்.