வெருகல் பிரதேசத்தில்  இருக்கக்கூடிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு மிகுந்த ஈடுபாடு காட்டுகிறேன். அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டி கோராள

(ஹஸ்பர் ஏ ஹலீம்)2022-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பிரதேச செயலக ரீதியாக பெற்றுக் கொள்ளுகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலக பிரிவுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெறல் நேற்று (27)பிரதேச செயலகத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுவின்  தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.
அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இன மத மொழி வேறுபாடின்றி அனைத்து இன மக்களதும் அபிவிருத்தி தொடர்பில் கூடிய கரிசனை கொண்டு அதற்காக பாரிய நிதி உதவிகளை மேற்கொண்டு வருகின்றார். கொவிட் காரணமாக  கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் நாங்கள் எதிர்பார்த்த அபிவிருத்தி விடயங்களை அடைய முடியாமல் போயிருந்தது .இருப்பினும்  கொவிட் டிற்கு மத்தியில் திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு வகையான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக இதன்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டம் அபிவிருத்தி உட்பட பல்வேறு விடயங்களில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. மாவட்டத்தில் ஏராளமான வளங்கள் காணப்படுகின்றது. எனவே  குறித்த வளங்களை  பயன்படுத்தி மாவட்டத்தை ஏனைய மாவட்டங்களிலும் பார்க்க சகல துறைகளிலும் முன்னேற்றம் கொண்ட  மாவட்டமாக மாற்றியமைப்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 ஜனாதிபதி உட்பட அரசாங்கம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு நிதி உதவிகளை வழங்கி வருகின்றது. இவற்றின் மூலம் மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருமானத்தை அதிகரிப்பது  நோக்கமாக காணப்படுகின்றது .வெருகல் பிரதேசத்தில் புரையோடிப் போய் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அரசாங்க அதிபர் அடிப்படையில் தாம் மிகுந்த
ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவதாகவும் அரசியல் தலைமை மற்றும் ஏனையவர்களும் ஒன்றிணைந்து செயற்படல் மூலம் இப்பிரதேசத்தின்  தேவைகளை நிவர்த்தி செய்யக் கூடியதாக அமையும் என்று இதன் போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில்  வெருகல் பிரதேச சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ,ஐக்கிய மக்கள் சக்தி  ஆகிய கட்சிகளின்  பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களுடைய முன்மொழிவுகளை முன்வைத்தமை   சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலபதி, வெருகல் பிரதேச செயலாளர் மொகமட் கனி , வெருகல் பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் ,கிராம முன்னேற்றச் சங்க தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.