தற்கொலைகளை கட்டுப்படுத்த  பொறிமுறை.

(அ . அச்சுதன்)  அதிகரித்துவரும் இளம் தற்கொலைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் சரியான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அண்மைக்காலமாக தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தொலைபேசிக்கு அடிமையாகி மாணவர்களும், சிறு சிறு குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி இளைஞர்கள் யுவதிகளும் தற்கொலை செய்து வருகின்றார்கள். இவர்களை பாதுகாக்கும் முகமாக அரசாங்கம் சரியான பொறிமுறையை உருவாக்கி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
உலக வங்கியின் அபிவிருத்தி குறிகாட்டிகளின்படி இலங்கையின் தற்கொலை இறப்பு ஒரு இலட்சம் பேருக்கு 14 பேர் என்ற விகிதத்தில் காணப்படுகின்றது. அத்துடன் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் மனநல கோளாறின் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் இவர்களில் 73 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் என்பதும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் யுத்தகாலத்தில் இறந்தவர்களைவிட தற்கொலையின் காரணமாக சம்பவிக்கின்ற இறப்புக்கள் அதிகரித்து வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள் தொலைபேசி மூலமாக தங்களுக்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான துரித அழைப்பு சேவைகளை நவீன முறையில் உருவாக்குவதோடு, இருக்கின்ற சேவைகளை திறம்பட இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமல்லாது இந்த சேவையினை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பாடசாலை ரீதியாக மனவள நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து உள ரீதியாக வலுவான மாணவர் சமுதாயத்தை உருவாக்க அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.