கிழக்கில் தடுப்பூசி போடாத எந்தஆசிரியரும் வகுப்பறைக்குள் நுழையமுடியாது!

கிழக்கில் 588  பாடசாலைகள் மாத்திரமே 21இல்  ஆரம்பம்!
ஆரம்பத்தில் சீருடைஅவசியமில்லை:முழுமையானகற்பித்தல் இல்லை!
தடுப்பூசி போடாத எந்தஆசிரியரும் வகுப்பறைக்குள் நுழையமுடியாது!
கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் புள்ளநாயகம் தெரிவிப்பு
( வி.ரி.சகாதேவராஜா


கொவிட் தொற்றினால் மூடப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் 200மாணவர்களுக்கு குறைவாக உள்ள ஆரம்பவகுப்புகளைக்கொண்ட 588பாடசாலைகள் மட்டுமே எதிர்வரும் 21ஆம் திகதி திறக்கப்பட ஏற்பாடுகள் பூர்த்திசெய்துள்ளதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி  புள்ளநாயகம் தெரிவித்தார்.


மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் திறக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை. மாறாக  மாகாணத்திலுள்ள வகை 3 ஜச்சேர்ந்த 346 பாடசாலைகளும் ,ஏனைய வகை 2 ,1சி, 1ஏபி வகை பாடசாலைகளில் 200மாணவர்களுக்குகுறைவாகஉள்ள ஆரம்பபிரிவைக்கொண்ட 242 பாடசாலைகளுமாக, மொத்தம் 588பாடசாலைகள்  திறக்கப்படவுள்ளன.
200மாணவர்களைவிடக்கூடுதலான மாணவர்களைக்கொண்ட ஆரம்பப்பிரிவை உடைய பாடசாலைகள் 21ஆம் திகதி திறக்கப்படமாட்டாது.
 
இன்று பூர்வாங்கஏற்பாடுகள்
அதற்கான பூர்வாங்கஏற்பாடுகள் இன்று(18)திங்கட்கிழமை ஆரம்பமாகின்றன. கொவிட்தடுப்பு தொடர்பாக தயாரிக்கப்பட்ட பதாதைகள் துண்டுப்பிரசுரங்கள் செய்திக்குறிப்புகள் அனைத்தும் இன்று மாகாணத்திலுள்ள சகல வலயங்களுக்கும் கையளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில்
வாரஇறுதியில் பாடசாலைதிறப்பது தொடர்பான பொது அறிவித்தல் அந்தந்த கோட்டவாரியாக பொதுஇடங்களில் ஒலிபரப்பப்படவுள்ளது.இவ்வாரம் பாடசாலைகளை சுத்தப்படுத்தல் உள்ளிட்ட தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 சூழ்நிலை காரணமாக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை பகுதியளவில் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்திருந்தது. இதற்காக கல்வியமைச்சும் சுகாதாரஅமைச்சும் இணைந்து வேலைத்திட்டங்களை வகுத்துள்ளது.
முதலிருவாரங்களில் …
முதலிருவாரங்களில் மாணவர்களுக்கு சுதந்திரமாக இயல்புநிலைக்கு திரும்புவதற்கேற்றவிதமாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன.கற்பித்தல் என்று பெரிதாக எதுவும் இடம்பெறாதவகையில் ஏனைய புறக்கிருத்தியசெயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு மாணவர் அனுமதிக்கப்படுவர்.

இதற்கன ஆரம்பநெறி மாணவர்களுக்கென எமது மாகாணகல்வித்திணைக்களம் 10வகையான போட்டிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. பேச்சு கட்டுரை சித்திரம் போன்ற 10வகையான துறைகளில் இல்விலகுமுறைப் போட்டிகள் முதலிருவாரங்களில் நடாத்தப்படவிருக்கின்றன. அதற்கான ஆயத்தங்களையும் இக்காலப்பகுதியில் ஆசிரியர்கள் மேற்கொள்ளமுடியும்.

அதேவேளை ,ஆரம்பநெறி ஆசிரியர்களுக்கு உளவள பயிற்சியளிப்பதற்கான வளவார்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவர்கள் இந்தவாரத்தில் ஆரம்பநெறி ஆசிரியர்களுக்கு மாணவர்களை கொவிட் நெருக்கடியிலிருந்து கற்றல்நிலைமைக்கு திருப்புவதற்கான பயிற்சியளிப்பார்கள்.
ஆரம்பத்தில் அதாவது முதலிருவாரங்களில் சீருடைஅவசியமில்லை அதேவேளை முழுமையானகற்பித்தல் நடைபெறமாட்டாது .

கிழக்கில் இதுவரை 98வீதமாக அதிபர்களும் ஆசிரியர்களும் கல்விசாரா ஊழியர்களும் தடுப்பூசி போட்டுள்ளார்கள். எனினும் தடுப்பூசி போடாத எந்தஆசிரியரும் வகுப்பறைக்குள் நுழையமுடியாது.
 
சிரமதானப் பணிகள்
கிழக்கு மாகாணத்தில் உள்ள 588பாடசாலைகள்எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ,அனைத்து பாடசாலைகளிலும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ,பாடசாலைகளில் குடிநீர் வசதி சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் போன்ற நடைமுறைகளை பேணுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்காக போதுமான நிதிஉதவியும் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலைக்கு மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கு சீருடை அவசியமில்லை எனவும்சாதாரண உடையில் சமூகமளிக்க முடியும்.
இரண்டு வாரங்களுக்கு கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்காமல் இணைப்பாடவிதான செயற்பாடுகள் முன்னெடுக்குமாறு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.


மேலும் மாணவர்களின் உடல் வெப்பநிலையினை அறிவதற்கு உடல் வெப்பமானியும் இதன்போது பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டதுடன் ஆரம்பிக்கப்படும் பாடசாலை தொடர்ந்து மூடாமல் இருப்பதற்கு ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் பெற்றோர்களின் முழு ஒத்துழைப்புடன் பாடசாலையினை முற்று முழுதாக சிரமதானம் செய்து சிறந்த முறையில் பாடசாலையை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இதன்போது கேட்டுக்கொண்டார்.

ஆசிரியர்கள் தொழிற்சங்கப்போராட்டம் என்று ஏதாவது சமுகமளிப்பின்மை இடம்பெற்றால் அதளை எதிர்கொள்ளுமுகமாக பிரதேசசெயலகங்களிலுள்ள அபிவிருத்திஉத்தியோகத்தர்களின் சேவையை பெறுவது தொடர்பாகவும் ஆளுநர் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருக்கிறது. எதுஎப்படியோ 21ஆம் திகதி பாடசாலைகள் திறபடுவது உறுதியாகிவிட்டது. என்றார்.