காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட படிவம் மரண சான்றிதழாக மாற்றம் பெற போகிறதோ சந்தேகம் எழுந்துள்ளது

(வாஸ் கூஞ்ஞ)

-காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக உறவினர்களிடம் வழங்கப்பட்ட படிவங்கள் இரண்டு வருடங்களுடன் காலாவதியாவதுடன் இவைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மரண சான்றிதழ்களாக மாற்றம் பெறப் போகின்றதோ என்ற சந்தேகம் இவர்களின் உறவினர்களுக்கு எழுந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இணையத்தின் இணைப்பாளர் ச.திலீபன் இவ்வாறு தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இணையத்தின் இணைப்பாளர் ச.திலீபன் ஆகியோர் மன்னாரில் புதன்கிழமை (13.10.2021) ஊடக சந்திப்பொன்றை நடாத்தினர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இணையத்தின் இணைப்பாளர் ச.திலீபன் தொடர்ந்து தெரிவிக்கையில்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறக்கப்பட்ட ஆரம்ப காலத்திலிருந்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களின் விபரங்களை பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அங்கு பதிவு செய்த வேளையில் பிரதேச செயலகங்கள் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர்பான சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன.

இவ் சான்றிதழ்கள் இரண்டு வருடங்களுக்கு மட்டும் செல்லுபடியானதாக காணப்படுகின்றது. ஆனால் தற்பொழுது இவ் சான்றிதழ்கள் இரண்டு வருடங்கள் பூர்த்தி அடைந்த நிலைக்கு சென்றுள்ளது.

ஆனால் இந்த சான்றிதழ்கள் பெற்று காலாவதியாகும் இந்த நிலையில் இதை மீண்டும் எவ்வாறு புதிப்பிப்பது என்ற எந்தவித அறிவித்தல் வழங்கப்படாமையால் இதைத் தொடர்ந்து என்ன செய்வது என காணாமல் ஆக்க்பட்டோரின் உறவினர்கள் பலரும் அங்கலாயிக்கின்றனர்.

இருந்தபோதும் இந்த படிவத்தைக் கொண்டு பிரதேச செயலகங்களுக்கு செல்லுகையில் அங்கு ஒரு படிவம் வழங்கப்படுகின்றது. அது இறப்பு படிவமாகவே காணப்படுனின்றது.

இதை நீங்கள் நிரப்பித் தந்தால் நாங்கள் உங்களிடம் உள்ள படிவத்தை புதுப்பித்து தருகின்றோம் என தெரிவிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பங்கள் இடம்பெற்று 12 வருடங்கள் கடந்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் சான்றாக இன்னும் மாற்றப்படாது இருந்து வருவதன் மர்மம் என்ன என்பது பலர் கேட்டு நிற்கின்றனர்.

இந்த நிலையை நோக்கும்போது காணாமல் ஆக்கப்பட்டோர்  முற்று முழுதாக மரணித்தவர்களின் பட்டியலில் இணையப் போகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. என உறவினர்கள் இதை தெரிவித்து நின்கின்றனர் என இவ்வாறு தெரிவித்தார்.

HomePage