சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலைய அபிவிருத்திக்கு துரித நடவடிக்கை; அமைச்சர் நாமல் உறுதி

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தை சகல நவீன வசதிகளும் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் றிஸ்லி மயோன் முஸ்தபாவின் அழைப்பின் பேரில் நேற்று புதன்கிழமை (13) இங்கு விஜயம், பயிற்சி நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலிலும் பங்குபற்றியிருந்தார்.

இதன்போது குறித்த இளைஞர் பயிற்சி நிலையத்தை சுற்றிப் பார்வையிட்ட அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அங்குள்ள குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார். அத்துடன் இப்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படுகின்ற கற்கை நெறிகள், அவற்றின் பயன்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இங்குள்ள குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு, இப்பிராந்திய இளைஞர், யுவதிகள் அனைவரும் நன்மையடையும் வகையில் அனைத்து தொழிற் பயிற்சிகளையும் வழங்கக்கூடியதான ஒரு நவீன தொழிற் பயிற்சிக் கல்லூரியாக இந்நிலையம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற தனது தந்தையார் மயோன் முஸ்தபாவின் எண்ணக்கருவை சாத்தியமாக்க உதவ முன்வர வேண்டும் என றிஸ்லி மயோன் முஸ்தபா இதன்போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

இத்திட்டத்தை வரவேற்ற அமைச்சர் நாமல், முதற்கட்டமாக அனைத்து நவீன வசதிகளும் கொண்டதாக இந்நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது வைத்தியசாலையின் நிர்வாக கட்டிடத் தொகுதியை மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் உயர் கல்வி பிரதி அமைச்சராக பதவி வகித்த மயோன் முஸ்தபா மேற்கொண்ட முயற்சியினால் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 04 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு, இவ் இளைஞர் பயிற்சி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.