மருதமுனை சுனாமி வீட்டு திட்டத்தை பயனாளிகளுக்கு  வழங்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுங்கள்

அரசாங்க அதிபருக்கு அமைச்சர் நாமல் அறிவுறுத்தினார்
                             த. தர்மேந்திரா
ஆழி பேரலை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருதமுனையில் கட்டப்பட்டு வழங்கப்படாமல் இருக்கும் வீட்டு திட்டத்தை பயனாளிகளுக்கு கையளிக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அறிவுறுத்தல் வழங்கினார்.

இளைஞர், விளையாட்டு மற்றும் அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நேற்று புதன்கிழமை அம்பாறை மாவட்டத்துக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு பொத்துவில், திருக்கோவில், சாய்ந்தமருது, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் அபிவிருத்தி வேலை திட்டங்களை பார்வையிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழக்கினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டபிள்யூ. டீ. வீரசிங்கவின் அழைப்பின் பேரிலான இவ்விஜயத்தில் சக பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஸ, பெரமுனவின் கல்முனை தொகுதி பொறுப்பாளர் றிஸ்லி முஸ்தபா, வீரசிங்க எம். பியின் கல்முனைக்கான பிரதிநிதிநிதி இஸட். ஏ. நௌசாத், அமைச்சரின் சட்ட ஆலோசகர் ஷிபான் மஹ்ரூப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக  இவ்வீட்டு திட்டம் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்படாமல் கிடக்கின்றது என்று வீரசிங்க எம். பி மூலமாக அமைச்சரின் மேலான கவனத்துக்கு நௌசாத் கொண்டு வந்தார்.
அமைச்சர் வீட்டு திட்டத்தை பார்வையிட நேரம் ஒதுக்கி கொடுத்த நிலையில் அரசாங்க அதிபரும் அங்கு வந்தார். இவ்வீட்டு திட்டத்தை பயனாளிகளுக்கு கையளிக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அந்த இடத்திலேயே அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தினார்.இவ்வீட்டு திட்டம் பழுதடைந்தும், பாழடைந்தும் கிடப்பது குறிப்பிடத்தக்கது.