சாணக்கியனுக்கு வாக்களித்தல். யூஎல்எம்என் முபீன்

நான் நீண்ட கால அரசியல் செயற்பாட்டாளர் என்பதுடன் அரசறிவியல் பாடத்தை உயர்தர மாணவர்களுக்கு நீண்ட காலமாக கற்பிக்கும் ஆசான் என்ற வகையில் நண்பர்களின் சிந்தனைக்காக இந்தப் பத்தியை எழுதுகிறேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணயக்கியனின் பாராளுமன்ற உரைகளில் கவரப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் அவருக்கு  தங்கள் வாக்கை எதிர்காலத்தில் அளிக்க உள்ளதாக முகநூலில் தெரிவித்திருந்தனர்.

தமழ் தேசியத்தை அரசியல் ரீதியாக பிரதிநிதிப்படுத்தும் சாணக்கியனுக்கு முஸ்லிம் சமூக ரீதியாக வாக்களிக்க முடியுமா என்பதை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்

இலங்கை முஸ்லிம்கள் அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தங்களை ஒரு தனியான சமூகமாக நிலை நிறுத்துவதில் பாரிய சவால்களையும் தடைகளையும் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்தனர்.

இந்த சவால்கள் மற்றும் தடைகள் கூடுதலாக தமிழ்த் தேசியப் பரப்பிலே இருந்தே முஸ்லிம்களுக்கு எதிராக வந்தது.

முஸ்லிம்களை தமிழர்களாகவே தமிழ் தேசியம் கருதியது. இதற்கு எதிராக முஸ்லிம் தலைவர்கள் போராடினர்.தாங்கள் தனியான சமூகம் என நிறுவ முயன்றனர்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக தமிழ் தேசியம் பின்னர் இஸ்லாமிய தமிழர்கள் என அழைத்தனர்.

தமிழர்கள் என்ற ஒன்று  கிடையாது நாம் அல்லாஹ்வை ஏக இறைவனாகவும் இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்ட தனித்துவப் பண்புகளைக் கொண்ட தனியான சமூகம் என முஸ்லிம் உம்மா என வாதாடியது.

பின்னர் தமிழ் தேசியம் தமிழ் பேசும் மக்கள் என முஸ்லிம்களை விழித்தது.
இந்த விழிப்பிற்குப் பின்னாலும் தமிழ் தேசிய அரசியல் சதியே மையங் கொண்டிருந்தது.

முஸ்லிம்களை தமிழ் பேசும் மக்கள் என்ற மகுடத்தின் கீழ் அடக்கி முஸ்லிம்களின் தலை விதியை தமிழர் தரப்பு தீர்மானிக்க முயன்றது.

தமிழ் தேசியத்தின் அரசியல் தலைவர்கள் இந்த நிலைப்பாட்டையே தமிழ் இயக்கங்களுக்கும் ஊட்டினர்.

தமிழ் ஆயுத இயக்கங்கள் முஸ்லிம்களிடம் வரி வசூலித்ததும் முஸ்லிம்களை கடத்தி அளவு கடந்து கப்பம் அறவிட்டதும் முஸ்லிம் மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை நீண்ட காலமாக கபளீகரம் செய்ததும் முஸ்லிம்களின் தலைவிதியை நாங்களே தீர்மானிப்போம் என்ற ஆதிக்க மனநிலையில்தான் அன்றி வேறில்லை.

மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம்களுக்கான தனித்துவமான அரசியல் கட்சியை உருவாக்கியதும் முஸ்லிம்கள் தனித்துவமான சமூகம்  என்பதை நிரூபிக்கவேயாகும்.

தமிழ் தேசியத்தோடு இணைந்து அரசியல் ஈடுபட்ட அஷ்ரப் அதன் அரசியல்  உளவியல் போக்கை துல்லியமாக இனங்கண்டதன் பேரிலேயே தனிக் கட்சி என்ற கொள்கையின் வழி முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்தார்.

முஸ்லிம்கள் தனியான அரசியலை ஆரம்பித்த பின்னர் சிங்கள தேசியம் சர்வதேசமும் இலங்கை முஸ்லிம்களை தனியான சமூகம் என்று ஏற்றுக் கொள்ளும் மன நிலைக்கு வந்த பின்னரும் தமிழ் தேசியம் முஸ்லிம்களை தனி சமூகமாக ஏற்றுக் கொள்ள மறுத்தே வந்தது.

இதற்கு  சிறந்த  உதாரணம் 2002ல் நடைபெற்ற நோர்வே நாட்டின் மஸ்தியஸ்தத்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் இலங்கை முஸ்லிம் சமூகம் ஒரு தரப்பாக கலந்து கொள்வதை தமிழ் தேசியம் முற்றாக மறுத்தது.

பின்னர் விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கு தங்களுடைய ஆளுகைக்கு உட்பட்டது இங்கு  வாழும் முஸ்லிம்கள் தங்களுக்கு ஆள்வரி செலுத்த வேண்டும் என்றனர். அதனை அறபியில் ஜிஸ்யா என்றே புலிகள் அழைத்தனர்.

இதுவரையில் தமிழ் தேசியம் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பில் தங்களின் சரியான  நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.

அம்பாறை முஸ்லிம்களின் கச்சேரி நிர்வாக கோரிக்கையான கரையோர மாவட்ட கோரிக்கைக்கும் எதிர்ப்பை வெளியிட்டது.

வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை முறைப்படியான மீள் குடியேற்றம் செய்ய எந்த  நடவடிக்கையும் தமிழ் தேசியம் இதுவரை முன்னெடுக்கவில்லை.

நல்லாட்சிக்கான தேசிய முண்ணனி இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் புரிந்துணர்விற்கு வந்தும் ஒரு இஞ்சியேனும் முன்னகர தமிழ் தேசியம் இடங்கொடுக்கவில்லை.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் பாரிய அளவில் காணிப்பிரச்சினைகளை எதிர் நோக்கில் சூழ்நிலையில் மாவட்ட  முஸ்லிம்களின் காணித் தேவைப் பூர்த்தியை அடாத்தாக தமிழ் தேசியம் மறுதலிக்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளில் அரசாங்கம் மாவட்ட முஸ்லிம்களுக்கென வழங்கிய கோரளை மத்தி பிரதேச செயலகத்தை தர தமிழ் தேசியம் மறுக்கிறது.

தமிழ் தேசியம் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாத சூழ்நிலையில் எப்படி முஸ்லிம்கள் அவர்களுக்கு வாக்களிக்க முடியும்?

வடக்கு கிழக்கு முஸ்லிம்களை தனிச் சமூகமாக ஏற்றுக் கொள்ளாத நிலையில் எப்படி அவர்களுக்கு வாக்களிக்க  முடியும்?

வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் காணி உரிமை மற்றும் ஏனைய உரிமைகளை மறுக்கும் மனநிலையில் உள்ள தமிழ் தேசியத்திற்கு எப்படி வாக்களிப்பது?

சாணக்கியன் தனி ஆளாக இருந்தால் அவருக்கு வாக்களிக்கலாம்.

அவர் தமிழ் தேசியத்தை அல்லவா பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

இது தொடர்பில் நண்பர்களின் காத்திரமான பின்னூட்டலை எதிர்பார்க்கின்றேன்.

அன்புடன்
யூஎல்எம்என் முபீன்