தீயில் கருகிய ஐவரின் உடல்கள் அடக்கம் மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு

தலவாக்கலை பி.கேதீஸ்

நுவரெலியா இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்,தந்தை,மகள் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் ஆகியோரின் இறுதி கிரியைகள் 9ம் திகதி இரவு இடம்பெற்றன. நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் ஐவரும் விடைப்பெற்றனர்.

இராகலை முதலாம் பிரிவு தோட்ட மைதானத்தில் சடலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் அத்தோட்ட பொது மயானத்தில் ஐவரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் தற்காலிக குடியிருப்பொன்றில் 7ம் திகதி இரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.இவர்களின் உடல்கள் இராகலை முதலாம் பிரிவு தோட்ட பொது மயானத்தில் 9 ம் திகதி புதைக்கப்பட்டன.

இறந்தவர்களின் மரண பரிசோதனை  நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இதன்போது நுவரெலியா சட்ட வைத்திய அதிகாரியால் திறந்த அறிக்கை வெயியிடப்பட்டதோடு உடற் கூறு மாதிரிகளை இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உடுகமசூரியவின் அறிவுறுத்தலுக்கமைய இராகலை பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசிங்கவின் வழிகாட்டுதலுக்கமைவாக இராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  டி.எம்.ஜெ.சமரகோன் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.