– இம்ரான் மஹ்ரூப்
பைஷல் இஸ்மாயில் –
அரசாங்கம் மீண்டும் இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்காக இனவாதத்தை தூண்ட ஆரம்பித்திருக்கின்றது. இது மீண்டுமொரு தேர்தலுக்கு செல்வதற்காகவா அல்லது அரசாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்காகவா என கேட்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 08 இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகளை பார்க்கும்போது மீண்டும் இனவாதத்தை கையில் எடுத்துக் கொண்டு நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினை ஒன்றை ஏற்படுத்தப் போகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
குறிப்பாக இந்த அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் பெரும்பான்மை சமூகத்தினரால் அமைக்கப்பட்ட அரசாங்கமாக இருந்தாலும் 20ஆவது திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நறைவேற்றிக் கொள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக் கொண்டது. இ்வ்வாறான நிலையில் அரசாங்கம் மீண்டும் இனவாதத்தை தூண்டுகின்ற நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றது.
குறிப்பாக ஞானசார தேரரின் முஸ்லிம் மக்களை தூண்டும் இனவாத செயற்பாடு சீசன் போன்று காலத்துக்கு காலம் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த இனவாதம் மீண்டும் தூண்டப்படுவதன் நோக்கம் ஒரு தேர்தலை எதிர்நோக்குவதற்கா அல்லது பொருளாதார பிரச்சினையை மறைப்பதற்காகவும் பொருள் மாபியாவை மறைப்பதற்காகவுமா என எண்ணத்தோன்றுகின்றது. அரசாங்கத்தில் இருக்கும் சில அமைச்சர்கள் இனவாத்தை போஷித்தவர்கள்.
குறிப்பாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை புறக்கனிக்குமாறும் அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் பிரசாரம் செய்த கம்மன்பில, விமல் வீரவன்ச, சரத் வீரசேக போன்ற அமைச்சர்கள் இன்று முஸ்லிம் நாடுகளுக்கு சென்று அங்கிருக்கும் அபிவிருத்திகளை பெற்றுக் கொள்ள அலைந்து திரிகின்றதை காண்கின்றோம். பங்களாதேஷிடம் கடன் கேட்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் அமைச்சர்கள் அரபு நாடுகளுக்கு சென்று வட்டியற்ற கடனை பெற்று வரும் நிலைமையே இருந்தது. ஆனால் அரசாங்கம் கொடுக்கல் வாங்கல் செய்து வரும் சீனா கடனை வழங்கி விட்டு நாட்டை எழுதிக் கொள்ளும் கலாசாரமே இருந்து வருகின்றது. ஆகையால் எதற்காக இந்த இரட்டை முகம் என்றே நாங்கள் அரசாங்கத்திடம் கேட்கின்றோம்.
அதுமாத்திரமல்லாது திருகோணமலை கின்னியா பிரதேசத்தில் காணி எல்லை பிரச்சினை எழுந்திருக்கின்றது. அதனால் அங்குள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. சிறுபான்மை மக்கள் என்பதால்தான் இந்த பிரச்சினை அங்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் பெரும்பான்மை மக்கள் அங்கு பாரிய இயந்திரங்களை பயன்படுத்தி காடழிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனை யாரும் கண்டுகொள்வதில்லை என்றார்.