கண்டா வரச்சொல்லுங்க தவிசாளரைக் கண்டா வரச்சொல்லுங்க களுதாவளையில் பிரதேச சபை முன்னால் ஆர்ப்பாட்டம்.

(ரக்ஸனா, கமல், துசி )

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று – களுதாவளை பிரதேச சபையின் முன்னால் சனிக்கிழமை(09) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பெரியகல்லாறு கிராமத்தைச் சேர்ந்த விளையாட்டுக்க கழக உறுப்பினர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….

பெரியகல்லாறு கிராமத்தில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து அக்கிராமத்தைச் சேர்ந்த 8 விளையாட்டுக் கழகங்களுக்கு மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்களால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இக்கடிதம் தமது விளையாட்டுத் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விளையாட்டுக் கழகங்கள் பிரதேச சபை தவிசாளரிடம் தெரிவித்ததையடுத்து இது தொடர்பில் சனிக்கிழமை(09.10.2021) நேரில் பேசி கலந்துரையாட வருமாறு தவிசாளரினால் விளையாட்டுக் கழகங்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தவிசாளரின் அழைப்புக்கு இணங்க சுமார் 50 இற்கு மேற்பட்ட விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் சனிக்கிழமை காலை பிரதேச சபைக்கு வருகை தந்தபோது அங்கு அழைப்பு விடுத்த தவிசாளரோ சபைச் செயலாளரோ இருக்கவில்லை. இந்நிலையில் அங்கிருந்த உத்தியோகஸ்த்தர் ஒருவரிடம் தவிசாளர் வரவில்லையா என கழக உறுப்பினர்கள் வினவியபோது அவர் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் அப்பிரதேச சபையின் உறுப்பினர் மே.வினோராஜ் ஆகியோர் விiளாயட்டுக் கழக உறுப்பினர்களுடன் கலந்தரையாடினர்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதேச சபை செயலாளரிடம் தொலைபேசியில தொடர்பு கொண்டு உரையாடி விட்டு இப்பிரச்சனைக்கு பிரதேச சபை நிருவாகத்தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துவிட்டு அவர் சென்றுவிட்டார்.

பின்னர் தமக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் தவிசாளர் உடன் இங்கே வரவேண்டும் எனகோரி பதாகைகளை ஏந்தியவாறு விளாயாட்டுக் கழக உறுப்பினர்கள் பிரதேச சபை முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “கண்டா வரச் சொல்லுங்க தவிசாளரைக் கண்டா வரச் சொல்லுங்க எந்தக் காரணத்தின் அடிப்படையில் பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து கிரிக்கட் விளையாடுவதை தடை செய்தீர்கள், மைதானத்தின் உண்மையான அளவினை நில அளவை செய்து உரியமுறையில் வரையறுத்து வர்த்தமானியில் பிரசுரித்து எங்களுக்குரிய மைதானத்தைப் பெற்றுத்தா ,தடையை நீக்கு தடைய நீக்கு, கடினப்பந்து கிரிக்கட் தடையை நீக்கு உள்ளிட்ட வாசகங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய்க கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரத்தை தொலைபேசியில் அவ்விடத்திலிருந்து தொடர்பு கொண்ட விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் எதிர்வரும் கிங்கட்கிழமை இப்பிரச்சனைக்குத் தம்மால் தீர்வு பெற்றுத்தரப்படும் என உறுதிமொழி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.