மன்னார் மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்து செல்லுகின்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன்

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் (செப்படம்பர்) ஒரு நாளைக்கு 9 பேர் தொடக்கம் 15 பேர் கொவிட் தொற்றாளர்ளாக காணப்பட்ட நிலை மாறி தற்பொழுது இது 7 ஆக குறைவடைந்துள்ளது. அத்துடன் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் இறுதி கட்டத்தை நாம் நெருங்கியுள்ளளோம் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் வெள்ளிக்கிழமை (08.10.2021) காலை தனது அலவலகத்தில் மன்னார் மாவட்டத்தில் கொவிட் 19 தொடர்பான ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

இவ் ஊடக சந்திப்பின்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டத்தில் நேற்றையத் தினம் அதாவது வியாழக்கிழமை (07.10.2021) அன்று பத்து கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் 05 நபர்கள் மடு சுகாதார அதிகாரி பிரிவிலும், 04 பேர் நானாட்டான் சுகாதார அதிகாரி பிரிவிலும் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலுமே அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர்.

இவர்களுடன் சேர்த்து இந்த மாதம் 52 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த மாதம் (செப்படம்பர்) ஒரு நாளைக்கு 9 பேர் தொடக்கம் 15 பேர் கொவிட் தொற்றாளர்ளாக காணப்பட்ட நிலையில் தற்பொழுது இது 7 ஆக குறைவடைந்துள்ளது.

அதேவேளையில் தற்பொழுது நூறு பி.சி.ஆர். மற்றும் அன்ரிஜென் பரிசோதனை மேற்கொள்ளுகின்றபோது ஐந்து பேரே கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்மாக 23 கொவிட் மரணங்கள் மட்டுமே மன்னார் மாவட்டத்தில் சம்பவித்து உள்ளன.

இவற்றில் ஆகக்கூடிய மரணம் ஓகஸ்ட் மாதமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 10 நோயாளர்கள் இவ் மாதத்தில் மரணித்துள்ளனர்.

இதேவேளை செப்டம்பர் மாதம் 12 ந் திகதிக்கு பின்பு கொவிட் தொற்றாளர்கள் எவரும் மரணித்ததாக பதிவு செய்யப்படவில்லை.

அத்துடன் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் இறுதி கட்டத்தை நாம் நெருங்கியுள்ளளோம்.

இருபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 85367 பேர் முதலாவது தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.

இரண்டாவது தடுப்பூசியை இதுவரை 63222 பேர் பெற்றுள்ளனர். இதில் மொத்த தடுப்பூசி வழங்கலில் முதலாவது தடுப்பூசியில் 81.3 சத வீதமானோரும். இரண்டாவது தடுப்பூசி 60.2 சத வீதமாகவும் காணப்படுகின்றது.

அத்துடன் 19 வயதுடைய பாடசாலை மாணவர்கள் அத்துடன் பாடசாலையைவிட்டு இடைவிலகல் ஆகியோருக்கான தனியொரு பைசல் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் வாரம் ஆரம்பமாக இருக்கின்றது.

இதற்கு அடுத்தபடியாக 18, 17. 16 மற்றும் 15 வயதினருக்கு இவ் தடுப்பூசி ஒழுங்கு முறையில் வழங்கப்படும் எனவும்.

இவ்வாறானவர்களுக்கு ஒரு தடுப்பூசியே வழங்கப்பட இருக்கின்றது. 19 வயதினருக்கு போடப்பட இருக்கும் தடுப்பூசி தொடர்பான வேலைத் திட்டம் தற்பொழது பூர்த்தி அடையும் நிலையில் காணப்படுகின்றது என இவ்வாறு தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பான வீடியோ

HomePage