இராகலையில் பரிதாபம் குழந்தைகள் உட்பட ஐவர் உடல் கருகி பலி. படங்கள்

தலவாக்கலை பி.கேதீஸ்

நுவரெலியா இராகலை தோட்டத்தில் 7ம் திகதி இரவு 10.30 மணிளவில் இடம்பெற்ற தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இராகலை முதலாம் பிரிவு தோட்டத்திலுள்ள தற்காலிக குடியிருப்பொன்றில் 7ம் திகதி இரவு 10.30 மணிளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக தாய், தந்தை அவர்களின் மகள் மற்றும் வீட்டில் வசிக்கும் ஒரே குடும்பத்தின் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரழந்தவர்கள் ராமையா தங்கையா (தந்தை) வயது (65), சிவனுமுத்து லெச்சிமி (தாய்) வயது (54), ஜெயக்குமார் நதியா (மகள்) வயது (35) மற்றும் குறித்த மகளின் பிள்ளைகள் 11 வயது மற்றும் 1 வயது பிள்ளைகள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் தினசரி ஒரு காய்கறி தோட்டத்தில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்ததுள்ளமை பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது. குடியிருப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதி பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகளால் தீவிர தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இத் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.