மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் நியமனத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு!

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால், வடமாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு இன்று  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி மற்றும் அவரது உறுப்புரிமை நீக்கப்பட்டு, கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், நேற்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் (Writ) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுவை இன்று ஆராய்ந்த சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகிய நீதிபதிகள் குழாம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, குறித்த மனு தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை, இந்த உத்தரவு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிசாளர் முஜாஹிர் சார்பில், சட்டத்தரணிகளான என்.எம்.ஷஹீட் மற்றும்  ருஷ்தி ஹபீப் உள்ளிட்ட குழாமினர் வாதங்களை முன்வைத்திருந்தனர்.

இதேவேளை, மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு இன்று இடம்பெற்றிருந்த நிலையிலேயே,  இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.