தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட ரெலோவில் இருந்ததாக வரலாறுகள் உண்டு

தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு நெடிய நீண்ட வரலாறு இருக்கின்றது. இந்த விடயங்கள் தெரியாமல் தமிழ்த் தேசியத்தின் குழந்தைப் பிள்ளைகள் கருத்துக்கள் கூறுவது சிறுபிள்ளைத் தனமானது என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தொடர்பில் அண்மைக் காலங்களில் வெளிவந்த கருத்துக்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆரம்பிப்பதற்கு முயற்சி எடுத்த அமைப்பான கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் முதலாவதாகச் சந்தித்த கட்சி தமிழீழ விடுதலை இயக்கம் தான். அதனைத் தொடர்ந்து தான் ஏனைய கட்சிகளை அந்த அமைப்பு சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு ஒரு பெரிய நீணட வரலாறு இருக்கின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் தான் ஆயுதப் போராட்ட இயக்கங்களிலே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். இதில் சில காலம் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட இருந்ததாக வரலாறுகள் உண்டு.

ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்குள் பல முரண்பாடுகள் ஏற்பட்டது வெளிப்படையான உண்மை. 2001லே கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து நாங்கள் எல்லோரும் ஒன்றாகினோம். இன்னுமொரு உண்மையும் இருக்கின்றது, ஆயுதப் போராட்ட இயக்கங்களாக இருந்து அரசியற் கட்சிகளாக போராட்ட இயக்கங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்பு 1989ம் ஆண்டில் இருந்து இன்றுவரைக்கும் தொடர்ச்சியாக நடைபெற்ற ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் தமிழீழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான் பாராளுன்ற உறுப்புரிமையை வகித்திருந்தது.

ஆனால் வரலாறு தெரியாத சில பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியத்தின் குழந்தைப் பிள்ளைகள், 2009 ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியத்துக்குள் வந்தவர்கள் கூறுகின்றார்கள் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் ஒரு கட்சி என்று மக்களுக்குக் காண்பிப்பதற்காக ஜெனீவாவுக்கு அனுப்பிய கடிதத்தில் கையொப்பம் வைத்துள்ளது என்று.

தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு நெடிய நீண்ட வரலாறு இருக்கின்றது. எமது கட்சியின் 50வது ஆண்டு பூர்த்தியை நாங்கள் 2019ம் ஆண்டு கொண்டாடியுள்ளோம். 52வது ஆண்டிலே தமிழீழ விடுதலை இயக்கம் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த விடயங்கள் தெரியாமல் கருத்துக்கள் கூறுவது சிறுபிள்ளைத் தனமானது.

கட்சியிலே தேசியத்துடன் நீண்ட காலம் இருக்க வேண்டும், வளர வேண்டும், பக்குவம் அடைய வேண்டும், அதற்குப் பின்பு இந்த வரலாறுகளைச் சரியாகப் படிக்க வேண்டும். எம்மைப் பொருத்தமட்டில் சுமார் 39 வருடங்களாக போராட்டம், அரசியல் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ற வரலாற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு கடந்த கால வரலாற்றினை யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. ஆனால் சிலருக்கு இந்த வரலாறுகளை யாராவது சொல்லிக் கொடுக்க வேண்டும் அல்லது ஏதாவது புத்தகத்தில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த வரலாறுகளைப் பற்றி அறிய வேண்டுமாக இருந்தால் அவற்றைச் சரியானவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்