தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமி சடலமாக மீட்பு

மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி,பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 13  வயது  சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08 இல் கல்வி கற்றுவந்த சிறுமி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு சிறுமி ஒருவர் தூக்கில் தொங்குவதாக தமக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு திசைகளிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் இரண்டு சகோதரிகள் மாத்திரம் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த சிறுமி கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் அவரது சகோதரி குளியலறையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு குளியலறையிலிருந்த சகோதரி வந்து பார்த்தபோது குறித்த சிறுமி  தூக்கில் தொங்கிய நிலையிலிருந்ததாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் மரண விசாரணை நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெட்னம் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு, சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.