நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டமானது ஏனைய மாவட்டங்களை விட திருமலையில் சிறப்பானது_

நீர்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்அநுராத ஜயரட்ன
ஹஸ்பர் ஏ ஹலீம்_
கொவிட் வைரசிற்கு மத்தியில் நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின்  முன்னேற்றம்  ஏனைய மாவட்டங்களின் முன்னேற்றத்தை விட மிகச் சிறப்பான முறையில் அமைந்துள்ளதாகவும் அதற்காக அர்ப்பணித்து சேவையாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும் தமது  நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக இன்று(26) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நீர்ப்பாசன அபிவிருத்தி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின்போது கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள  குளங்கள் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார்.
தேசிய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நீர்ப்பாசனத் செழுமை அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கிராமிய குள நிர்மாண வேலைகளின் போது கிராமத்தில் இருக்கக் கூடிய வசதி வாய்ப்புகள் இயந்திர சாதனங்கள் தொழிலாளர்களை பெற்றுக் கொள்வதன் மூலமாக அக்கிராம மக்கள் பொருளாதார ரீதியாக பல பலன்களை பெறக்கூடியதாக இருக்கும். எனவே குறித்த திட்டங்களை வகுக்கும் போது அக்கிராம மக்கள் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி வாய்ப்புக்கள், சேவைகளை உள்ளடக்கிய அடிப்படையில் உரிய அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படுவது சாலச் சிறந்தது என்று அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை காலமும் குளங்களின் எல்லைப்புற பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்படாமல் இருப்பதாகவும் பிரதேசங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. குறிப்பாக 70 பட்டதாரிகள் அமைச்சுக்கு இணைக்கப்பட உள்ளார்கள். நிலஅளவைத் திணைக்களத்தின் மூலம் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் குளங்களை அண்டியுள்ள பிரதேசங்களில் உள்ள  காணி அபகரிப்பு செய்வதனை தடுக்க கூடியதாக இருக்கும். அத்துடன் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற குள  புனர்நிர்மாண வேலைகளின் போது கிராம மக்களுக்கு மிகவும் பிரயோசனம் ஏற்படக்கூடிய வகையில் அந்த அபிவிருத்தி திட்டங்களை வினைத்திறனான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். கடந்த ஆட்சியில்  மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குள அபிவிருத்தி திட்டங்கள் பிரச்சினைகள் கொண்டதாகவும் தரமற்றமாக காணப்படுவதாக மக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளது. எனவே அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஏற்படா வண்ணம் புனர்நிர்மாண வேலைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு இதன்போது அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
நீர்ப்பாசன செழுமை வேலைத்திட்டத்தின் கீழ் எஞ்சி உள்ள குளங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கான   நிதி  விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும். தற்பொழுது வைரஸ் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பல பாதிப்புக்களை எதிர்நோக்கி இருந்தாலும்  நாட்டினுடைய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.
மாவட்டத்தினுடைய நீர்ப்பாசன அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்கி வருகின்றது. குறிப்பாக இராஜாங்க அமைச்சர் எமது  மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மாவட்டத்தினுடைய நீர்ப்பாசன அபிவிருத்தி தொடர்பான விடயங்களை மேற்பார்வை செய்து எதிர்வரும் காலங்களில் மாவட்டத்தினுடைய நீர்ப் பாசன அபிவிருத்திக்கு தேவையான  உதவிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளார். இவ்வருடம் உட்பட தொடர்ந்து வருகின்ற வருடங்களில் மாவட்டத்தில் நீர்ப்பாசன அபிவிருத்தி தொடர்பான பல வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக பாரிய நிதி மாவட்டத்திற்கு  கிடைக்கப்பெறும். இதன் மூலம் மாவட்டத்தினுடைய உற்பத்தியை அதிகரிக்க கூடிய வசதி வாய்ப்பு ஏற்பட்டு மக்களுடைய வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்ய கூடியதாக அமையும்.  மாவட்டத்தில் பல்வேறு வகையான அபிவிருத்தி செயற்பாடுகள் எவ்வித வேறுபாடுமின்றி 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருக்கக்கூடிய மக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவதாக இதன்போது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாகிய கபில நுவன்  அத்துகோரல தெரிவித்தார்.
நீர்ப்பாசன செழுமை வேலைத்திட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இவ்வருடம் 102 குளங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றுள் இவ்வருடம் நாற்பத்தி மூன்று குள வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு  நூற்றுக்கு எண்பது வீதமான வேலைகள் பூர்த்தி அடைந்துள்ளதாக இதன்போது திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் அப்துல் ஜப்பார் தெரிவித்தார். இதற்காக அரசாங்கம் இதுவரை 480 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
அதிமேதகு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உணவு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக நீர்ப்பாசன செழுமை திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் இதன்மூலம் விவசாயம் செய்கின்ற பரப்பளவுடைய முன்னரைவிட அதிகரிக்க முடியும். திருகோணமலை மாவட்டத்தில் பெரும் போகத்தில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர் நிலங்களை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்த முடியும். குள புனர்நிர்மாணம் செய்யபடுவதன் மூலமாக இரண்டு போகங்களையும் எவ்வித நீர்  பிரச்சினையுமின்றி விவசாயிகள் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். இதனால் விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட்டதாக அமையும் என்று இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
அத்துடன் விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளையும் அவதானித்து அமைச்சர் அதற்கு  சாதகமான பதில்களை  வழங்கியதுடன் ஏனைய விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்றும் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நீர்ப்பாசன திணைக்கள இராஜாங்க அமைச்சின் செயலாளர், நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் நாயகம், உரிய உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.