காணி பகிர்ந்தளிப்பில் முறுகல் நிலை : பொலிஸ் தலையீட்டால் இடை நிறுத்தம்

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை பத்தாம் கட்டை -கித்துள்உத்துவ  பகுதியில் காணி பகிர்ந்தளிப்பதில் இன்று (25) மொரவெவ பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த யுத்த காலத்தில் இருந்து இன்று வரைக்கும் தமது பூர்விக விவசாய நிலங்களை  பராமரித்து வந்திருந்த நிலையில் மொரவெவ பிரதேச செயலகத்தின் ஊடாக வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு காணிகளை  பகிர்ந்த அளிப்பதற்காக முயற்சிகளை பிரதேச செயலகம் மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் தாம் விவசாயம் செய்துவந்த காணிகளை வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்க வேண்டாம் எனக் கூறி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
ஆனாலும் பத்தாம் கட்டை சனசமூக நிலையத்தில் மொரவெவ பிரதேச செயலக  காணி உத்தியோகத்தர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அழைத்து கிராம மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் , ஊரடங்கு அமுலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், பத்தாம் கட்டை, மற்றும் கித்துல் உதுவ மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இருந்தபோதிலும் காணி பகிர்ந்தளிக்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த சனசமூக நிலையத்திற்கு சென்று வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுக்கு காணி வழங்குவதை நிறுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், கூட்டம் நடைபெற்ற சனசமுக நிலையத்திற்குள் உள் நுழைய முயற்சித்த கிராம மக்களை பொலிஸார் உள் நுழைய விடாது தடுத்ததாகவும் இதனால் அங்கு பதட்ட நிலை ஏற்பட்டது.
ஆனாலும் குறித்த இடத்திற்கு மொரவெவ பிரதேச செயலாளர் பாத்திய விஜயந்த வருகை தந்திருந்த போதிலும் கிராம மக்கள் கோஷமிட்டு தமக்குரிய சொந்த காணிகளை வெளி மாவட்ட மக்களுக்கு வழங்க வேண்டாம் எனவும் கோரி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் பொதுமக்களுக்கும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இம்முறுகல் நிலையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டதுடன் குறித்த காணி பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இடைநிறுத்தப்பட்ட தாகவும் தெரியவருகிறது.
இதன்போது பிரதேச செயலாளரினால் விவசாய காணிகளை உரிய நபர்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்க்கப்பட்டது.