ஓட்டமாவடி மஜ்மா நகரில் ஜனாஸா அடக்கும் விவகாரங்களை சிலர் தங்களுடைய சொந்த நலனுக்காக பயன்படுத்துகிறார்களா?

எனும் சந்தேகம் நிலவுகிறது – பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் சிறாஜி

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் பணிக்கு நாம் அன்று முதல் இன்றுவரை எங்களால் முடிந்த பங்களிப்புகளை செய்து வருகிறோம் என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் சிறாஜி தெரிவித்தார்.

கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் நில பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நல்லடக்கப் பணிகளை தெரிவு செய்யப்பட்டுள்ள வேறு இடங்களுக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்து கல்குடா தொகுதியிலுள்ள 69 அமைப்புகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பு இன்று (24) ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ. தவராஜாவிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதேச சபை உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்ததும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஓட்டமாவடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதி குறைந்த காணியுள்ள இடமாக இருக்கிறது. இதில்தான் குப்பைகளை கொட்ட வேண்டும். அத்துடன் எங்களது சமூகத்தின் எதிகால சந்ததியினர் வசிக்கவும், விவசாயம் செய்யவும் வேண்டும்.

ஓட்டமாவடி மஜ்மா நகர் பிரதேசத்தில் ஜனாஸா நல்லடக்கத்துக்கு பதினான்கு ஏக்கர் நிலம் இருக்கிறது என்ற ஒரு செய்தி தேசியத்துக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக நாம் ஓட்டமாவடி பிரதேச செயலக செயலாளர் வி.தவராஜாவிடம் வினவியபோது நான் பதின்நான்கு ஏக்கருக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று எம்மிடம் தெரிவித்தார்.

அங்கு ஜனாஸா நல்லடக்கத்துக்கு முதற்கட்டமாக மூன்று ஏக்கரும் இப்போது இரண்டு ஏக்கரும் மாத்திரம்தான் நான் அனுமதி வழங்கியுள்ளேன் என்று ஓட்டமாவடி பிரதேச செயலக செயலாளர் எம்மிடம் மேலும் கூறினார் என்று பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.

கிண்ணியா – வட்டமடு பகுதிக்கு நாங்கள் அண்மையில் சென்று வந்தோம் அங்கு பதினைந்து ஏக்கர் காணி முழுமையாக சீர்செய்யப்பட்டு கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற மூவின மக்களையும் அடக்குவதற்கு தயாராக உள்ளது.

இந்நிலையில்தான், ஓட்டமாவடி மஜ்மா நகரில் ஜனாஸா அடக்கும் விவகாரங்களை சிலர் தங்களுடைய சொந்த நலனுக்காக வேண்டி இதனைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக ஓட்டமாவடியில் தான் அடக்க வேண்டும் என்று செயற்படுகிறார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று ஹாமித் சிறாஜி தெரிவித்தார்.